அரசு பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடி அசத்திய வெளிநாட்டுப் பயணிகள்!

வெளிநாட்டுப் பயணிகள் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து கொண்டாடிய தமிழர்திருநாள் காரைக்குடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.


 

பாரம்பரியம், கட்டிடக்கலை, பண்பாடு, இலக்கியம், வீரம் ஆகியவற்றை அடைகாத்த சுதந்திர மண் என பன்முகம் கொண்டது சிவகங்கை மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கானாடுகாத்தான் அரண்மனையை சுற்றிபார்க்கவும் அங்குள்ள கட்டிடக்கலையை ரசிக்கவும் பொங்கல் திருவிழாவிற்கும் வருகை தருவது வழக்கம். அப்படி வந்த வெளிநாட்டு பயணிகள் காரைக்குடி நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார்கள். அவர்களை அப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய வேட்டி சட்டை சேலை அணிந்து பழமைமாறாமல் பண்பாடு மாறாமல் வரவேற்றார்கள். இவ்விழாவிற்கு வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு அன்பான உபசரிப்பு இது தான் எங்களை ஈர்க்கின்றது. இது போன்ற உணர்வுகள் எங்கள் நாட்டில் இல்லை என்று சொல்லி மகிழ்ச்சியில் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள்.

ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தேவராட்டம் போன்ற ஆட்டங்கள் நடனங்கள் ஆடி பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள் பள்ளி மாணவர்கள். அதன்பிறகு 7-ம் வகுப்பு மாணவர்களின் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், லெமன் அண்ட் ஸ்பூன், உறி உடைத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் எல்லாம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினருக்கு புதிதாக புத்துணர்வாக இருந்தது. மாணவர்கள் வெளிநாட்டுப் பயணிகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கூட்டாக சேர்ந்து கரும்பு பனைக்கிழங்கு தித்திக்கும் பொங்கல் படைத்து அனைவரும் உண்டு மகிழ்ந்த நிகழ்ச்சி தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்  உலகுக்கு எடுத்துக்காட்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!