வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:18:47 (15/01/2018)

மரண வாக்குமூலத்தைச் சொல்லும் அங்கமுத்து எழுதிய கடிதம்!

அங்கமுத்து

பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

                                                                      

 

                                                                   

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,  2012 முதல் 2015 வரை பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அவர் பதிவாளராக இருந்தபோது,  முத்துச்செழியனும் சுவாமிநாதனும் துணைவேந்தர்களாக இருந்தார்கள். அப்போது, தகுதி இல்லாதவர்களை பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கும், பல்கலைக்கழக ஊழியர்கள் பணிக்கும், ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நியமித்தார்கள். அவர்களுடைய கோப்புகள் இருந்தால் பிற்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள். அங்கமுத்துவின் பணிக்காலம் நிறைவுபெற்று புதிய பதிவாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு,  பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதனின் பணிக்காலமும் நிறைவுபெற்றது.  தற்போது, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வு நடைபெற்றுவருகிறது. அதில், அங்கமுத்துவும் தேர்வாகியிருந்தார். இந்நிலையில் பதிவாளர் மணிவண்ணன், கோப்புகளைக் காணவில்லை என சூரமங்கலம் காவல் நிலையத்தில் அங்கமுத்து மீது புகார் கொடுத்தார். இந்தக் காரணத்தால்தான் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

அதில், `பெரியார் பல்கலைக்கழகத்தில் சிங்கம் போல் இருந்த என்னை 13.11.2017 அன்று நடைப்பெற்ற சிண்டிகேட் மீட்டிங்கில் அசிங்கப்படுத்தி விட்டார்கள். மேலும் எக்ஸாம் ரிசல்ட் போடுவதில் கம்ப்யூட்டர் அரவிந்த் சென்னை வசம் கோடி கணக்கில் பணம் பெற்றுள்ளார். சுவாமிநாதன், லீலாவும் மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.ஜி., எஜிகேஷன் சென்டர் ஈரோடு எம்.பி.ஏ., டிப்பார்மென்டில் பணிபுரியும் முருகானந்தம் என்பவரும் எம்.பி.ஏ.,வில் 52% மார்க் தான் வைத்துள்ளார். இருப்பினும் ஜேம்ஸ் பிச்சை வசம் சொல்லி போஸ்டிங் வாங்கி கொடுத்துள்ளார் சுவாமிநாதன். என்னால் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயன்பெற்றவர்கள் நீடுழி வாழ்க. எனவே இக்கடிதத்தில் உள்ளவை யாவும் உண்மைதான் என உறுதி அளித்து இதை எனது மரண வாக்கு மூலமாக பதிவு செய்து கொள்ளவும்.

குறைந்தது 10 லட்சம் பெற்றுக் கொண்டுதான் கையெழுத்து போட்டார். மேலும் நியூ கோர்ஸ் ஒன்றுக்கு 1 லட்சம் வீதம் பெற்றுக் கொடுத்துள்ளேன். விடை தாள்கள் வாங்குவதில் மாபெரும் மோசடி செய்துள்ளனர். என்னுடைய பணி காலத்தில் மதுரை விமலா பேப்பர்  என்பவரிடம் 85 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். நாமக்கல் கிங் காலேஜில் காலை 10:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய தேர்வுகள் 9:45க்கே ஆரம்பித்தார்கள். அதை நானும் பல்கலைக்கழக நூலகர் சுப்பிரமணியனும், நேரில் ஆய்வு செய்து கண்டுபிடித்தோம். அதன் பிறகு அக்கல்லூரிக்கு தேர்வு மையத்தை ரத்து செய்ய ஆணை பிரப்பித்தோம். அவர்களிடம் ரூ 10 லட்சம் பெற்றுக் கொண்டு அதை ரத்து செய்தார். நான் தற்போது தற்கொலை செய்து கொள்ளுவதற்கான முழுக்காரணமும் அவர் தான். ஏனென்றால் அவரது பணிக்காலத்தில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணி அமர்த்தும் விதமாக 7.1.2016 மற்றும் 20.1.2016 ஆகிய தேதிகளில் அலுவலக உதவியாளர்கள் நெல்சன், ராசமாணிக்கம் மற்றும் ஶ்ரீதர் ஆகியோரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு 3.10.2017 அன்று எனக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதில் டீச்சிங், அண்டு நான்-டீச்சிங், அப்பாயிண்மென்ட் ஃபைல்ஸ் 23 கன்சாலிடேடேட் ஃபைல்ஸ் அவரிடம்தான் உள்ளது என்று சிண்டிகேட்டில் ஶ்ரீதர் அஸிஸ்டெண்ட் கூறியுள்ளார். 23 கன்சாலிடேடேட்   ஃபைல்ஸ் நெல்சன் மற்றும் குழந்தைவேல் ஆகியோர்களிடம் உள்ளது. இதை விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ளவும். எனவே காவல்துறையினர் உண்மையை விசாரிக்க வேண்டும். எனக்கு மன உளைச்சலை கொடுத்த மேற்கூரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டு வரும் கிருஷ்ணகுமார் டீம் சி.எஸ்.சி., அன்பழகன் மற்றும் அவரது குரூப் யாவரும் உருப்பட மாட்டார்கள். எனது மறைவுக்கு தயவு செய்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாரும் எனது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வர வேண்டாம். எனக்கு இதுவரையில் நல்ல உறுதுணையாக இருந்த லிட்டரெரியன் என்.சுப்பிரமணி மற்றும் எனது நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுவாமிநாதன், மணிவண்ணன், நெல்சன், குழந்தைவேல், ராசமாணிக்கம் வசம்தான் அனைத்து டீச்சிங் ஃபைல்களும் உள்ளன. எனவே ராசமாணிக்கத்தை தனியாக விசாரிக்கவும். இதுவே எனது மரண வாக்குமூலம் ஆகும். மேலும் எனது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் என்னை மன்னிக்கவும்' என்று மரணத்துக்கான காரணத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளார் அங்கமுத்து. இந்த கடிதம் அங்கமுத்து இறப்பு விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க