வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:04:00 (14/01/2018)

மதுரையில் வெளிநாட்டினர் பங்கேற்ற ஸ்பெஷல் பொங்கல் விழா!
 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளியே கலை நயத்துடன் அமைந்திருக்கும் புதுமண்டபம் என அழைக்கப்படும் வசந்த மண்டபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் சுற்றுலா கலை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் தலைமை ஏற்று நடத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக பாண்டியன் ஹோட்டல் இயக்குநர் வாசுதேவன், தானம் அறக்கட்டளை பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முனியாண்டி கலைக்குழு, கோவிந்த ராஜ் இசைக் கச்சேரி, ஜாஸ்மின் குழுவின் பரதம் உள்ளிட்ட கிராமிய கலைகளும் நிகழ்த்தப்பட்டன. இதில் ஏராளமான வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர் . அமெரிக்க சுற்றுலாபயணிகள் தப்பாட்டதை தாளம் மாறமல் அடித்து வியப்பில் ஆழ்த்தினர் .

 

மேலும் இவ்விழா தொடர்பாக சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் கூறுகையில், "ஆண்டுதோரும் சுற்றுலாத்துறை சார்பாக மதுரையில் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாப்படும். இதற்காகவே ஆர்வம் கொண்டு சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவார்கள். இந்தாண்டு ஜனவரி 13 முதல் 16-ம் தேதி வரை தொடர்ந்து பல கட்ட பொங்கல் விழா சுற்றுலாப் பயணிகள் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை புதுமண்டபத்தில் தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர். இப்படி ஒரு நிகழ்ச்சியை புதுமண்பத்தில் நடத்தியதால் சுற்றுலாத்துறைக்கு பல பாராட்டுகள் குவிந்துவருகின்றன" என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .