வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:05:00 (14/01/2018)

பொங்கலுக்கு திருச்சி வழியாக பயணம் செய்யப் போறீங்களா..? அப்படியானால் இதை மிஸ் பண்ணாதீங்க!

வாரத்தின் எல்லா நாள்களும் திருச்சி பேருந்துகள் நிரம்பி வழியும். அதுவும் விசேஷ நாள்கள் வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். பொங்கல் தீபாவளி காலங்களில் சென்னை போன்ற பெருநகரங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தால், திருச்சி வந்து பேருந்து மாறிச் செல்வது வழக்கும். அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வரும் மக்களால் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

திருச்சி தற்காலிக பேருந்து நிலையம்இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேண்டும் என்கிற கோரிக்கை செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. இரண்டு முறை தமிழக அரசு இதற்கான அறிவிப்புகள் வெளியிட்டும் பலனில்லாமல் கிடக்கிறது.

இதனால் தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்காலங்களில் திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், பயணிகளின் நலன்கருதியும் திருச்சி மாநகரில் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும், சோனா, மீனா திரையரங்கம் அருகிலும் புதிதாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பேருந்துநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 12-ம் தேதி முதல்  செயல்படத் துவங்கியுள்ள இந்த பேருந்து நிலையங்கள் வரும் 18-ம் தேதி வரை செயல்படும் என திருச்சி மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள  சோனா- மீனா திரையரங்கம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகிலிருந்து  இயங்குகிறது.

மேலும் புதுக்கோட்டை மற்றும்  மதுரை மார்க்கம் செல்லும் பேருந்துகள்  திருச்சி மன்னார்புரம்  ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை பிக்கப் செய்துக்கொண்டு  அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்கின்றன.  மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம் போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன..

மேலும்  மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் காவல் துறையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொது  மக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும்  போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளுக்கு  காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர்  வாட்ஸ்அப் எண்  96262 73399-க்கும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார்கள் போலீஸார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க