வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (14/01/2018)

கடைசி தொடர்பு:11:58 (14/01/2018)

'புதிய கோட்டை' சமஸ்தானம் புதுகோட்டை மாவட்டமாக மாறியது இன்றுதான்! #HBDPudukottai

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள். பல்வேறு பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவானது இன்றைய தினத்தில்தான்.

இன்றைய தேதியிலிருந்து சரியாக 44வருடங்களுக்கு முன்பு, அதாவது,14.01.1974-ம் வருடம் தமிழ்நாட்டின் பதினைந்தாவது மாவட்டமாக உதயமானது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளியின் வருவாய் கோட்டமாக மட்டுமே இருந்து வந்த புதுக்கோட்டையை, நிர்வாக வசதிக்காக தனி மாவட்டமாக பிரித்தவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி.

நாற்பத்து நான்கு வயது முடிந்து, நாற்பத்து ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் புதுக்கோட்டை மாவட்டம்  பல்வேறு தனித்துவமான அடையாளங்களை கொண்டது. சித்தன்னவாசல் சமணர் படுக்கைகள், குடைவரைக் கோயில்கள், திருமயம் கருங்கல் கோட்டை,குடுமியான்மலை, விராலிமலை என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  தொண்டைமான் ஆளுகைக்குட்பட்ட பெரும் சமஸ்தானமாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி.1686) தொண்டைமான் பேரரசர்கள் தங்களுக்கென்று புதிய நகரை நிர்மாணித்து, அதற்கு  'புதிய கோட்டை'என்ற பெயரிட்டார்கள். காலப்போக்கில் அது புதுக்கோட்டை என்று மருவி விட்டது

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாகவே இருந்து வந்த புதுக்கோட்டையை, அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவுடன் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் பிரகதாம்பாள் தாஸ்  இராஜகோபால தொண்டைமான் தேசிய உணர்வுடன் இந்தியாவுடன் இணைத்திட ஒப்புதல் அளித்தார். 

அதன்படி ,கணக்கற்ற ஏராளமான  சொத்துக்களுடனும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ரூபாய் 72 லட்சத்துடனும் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம்  வருடம் இந்தியாவுடன் இணைத்தார்.அதன்பிறகு, தனிமாவட்டமாக உருவாகியது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி  கேட்டுக்கொண்டதற்கிணங்க, சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை  ஆட்சி தலைவர் அலுவலகம் அமைப்பதற்கு தமிழக அரசிடம் ஒப்படைத்தார் தொண்டைமான் மன்னர். தமிழகத்தில், அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்)  மாவட்ட ஆட்சியரகம் அமைந்திருப்பது புதுக்கோட்டையில் மட்டும்தான். 

 'நீயா நானா'கோபிநாத், திரை இயக்குநர் 'பசங்க'பாண்டிராஜ் உள்ளிட்ட திரை ஆளுமைகள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆறே இல்லாத மாவட்டம் இது. ஆனாலும்  ஐந்து காட்டாறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. அந்த ஆறுகள் இந்த மாவட்டத்திலேயே உருவாக, இங்கேயே முடிந்தும் விடுகின்றன.  தமிழர்களின் தனித்துவமான  திருநாளான பொங்கல் பண்டிகை அன்று  பிறந்திருப்பது கூடுதல் சிறப்பு. 'ஹேய்.. புதுக்கோட்டை,ஹேப்பி பர்த்டே டூ யூ!'