கடை ஒன்றுக்கு ரூபாய் 1000 வசூல்! - பொங்கல் சந்தைகளில் அடாவடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடிய சிறப்பு சந்தைகளில் கடை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைதாரர்கள்  அடாவடியாக வசூல் செய்ததால், அதிர்ச்சியடைந்த சிறு வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திவ் வாரச்சந்தைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. வாரத்தின் எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு ஊரில் சந்தை கூடியபடியே இருக்கும். அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களை மையமாக வைத்து இந்த வாரம் சந்தைகள் நடக்கும்.

சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தச் சந்தைகள் இரவுச் சந்தை, பகல்சந்தை என்று இரண்டு வகையாகவும் நடப்பதுண்டு. பகல் சந்தையை விட, இரவுச் சந்தைதான்  களைக்கட்டும். அதற்கென்றே விளக்குகள் அமைத்திருப்பார்கள். பார்ப்பதற்கே திருவிழா நடைபெறுவது போல், ஜெகஜோதியாக இருக்கும். 

இதெல்லாம் சாதாரண நாட்களில்தான். தீபாவளி, பொங்கல் மாதிரியான பெரிய பண்டிகை நாட்களில் எல்லா ஊர் சந்தைகளும் இரவும் பகலும் இணைந்த சந்தையாகக் கூடும். அதாவது,பண்டிகை நாளுக்கு முதல்நாள் விடிய விடிய இந்தச் சந்தைகள் நடக்கும். அப்படி நேற்று கூடிய திருச்சிற்றம்பலம் இரவுச்சந்தையில்  குத்தகைதாரர்கள் ஒவ்வொரு வியாபாரியிடமும்  அதட்டி உருட்டி மிரட்டி அடாவடியாக ஆயிரம் ரூபாய் வசூலித்து இருக்கிறார்கள். அத்துடன் டூவீலர்களை பார்க் செய்திருந்தவர்களிடமும் முப்பது ரூபாய் கேட்டு தகறாரு செய்திருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும் கோபமடைந்த வியாபாரிகளும் குத்தகைதாரரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், குத்தகைதாரர் சார்பாக வசூலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர். இதனால்,சமாதானமடைந்த சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஒருமணி நேரத்துக்கு மேலாக கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு பரபரப்பு எழுந்தது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

"சாதாரணமாக ரொம்ப சின்ன கடைகளுக்கு ரூபாய் 50, பெரிய கடைகளுக்கு ரூபாய் 100 வசூலிக்க வேண்டும். பண்டிகை நாள் என்பதால், அவர்கள் கூடுதலாக பணம் கேட்பது வழக்கமாக நடப்பதுதான். ஐம்பது,நூறு கூடுதலாகக் கேட்பார்கள். நாங்களும் அதைக் கொடுப்போம். ஆனால் இந்தமுறை, 'கடைக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இல்லையென்றால், அடுத்தவாரம் சந்தையில்  கடை போடமுடியாது'என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள். நாங்க வட்டிக்குக்  வாங்கிய  பணத்தை முதலீடாக  போட்டு வியாபாரம் பண்றோம். இரவுக்கடை என்பதால்,இங்கு போட்டிருக்கும் லைட் ஜெனரேட்டருக்கு பணம் தரவேண்டும். இதுதவிர, மாமுலான விசயங்கள் வேற இருக்கு. இப்படி பல நெருக்கடிக்கு நடுவில் தான்  நாங்கள் எங்கள் பிழைப்பை பார்க்கவேண்டியிருக்கு. இதிலே,ஒட்டுமொத்த ரத்தத்தையும் உறிஞ்சி துப்புற மாதிரி, ஆயிரம் ரூபாய் கேட்டால நாங்கள் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க. அதான், சாலை மறியலில் இறங்கினோம்" என்றார்கள் சந்தை வியாபாரிகள். இதே போன்ற சலசலப்பு ஆலங்குடி இரவுச் சந்தையிலும் எழுந்து அடங்கியது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!