வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (14/01/2018)

கடைசி தொடர்பு:18:24 (30/06/2018)

18 மாதத்தில் சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்! - பயத்தினால் மரத்தடியில் பயிலும் மாணவர்கள்

அடிப்படை பணிகளுக்காக அரசு ஒதுக்கும் தொகையினை முழுமையாக செலவழிக்காமல் தங்கள் பாக்கெட்டை நிரப்பி கொள்ளும் ஒப்பந்தகாரர்களாலும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பலரின் உயிரை பழி வாங்க காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு பள்ளி கட்டிடம்

வளர்ச்சியிலும், வறட்சியாலும் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருப்பது ராமநாதபுரம் மாவட்டம். பெரிய தொழிற்சாலைகளோ, வியாபார நிறுவனங்களோ இல்லாத மாவட்டம். ராமேஸ்வரம் கோயில் மற்றும் மீன்பிடி தொழிலை மட்டுமே பிரதானமாக சார்ந்திருக்கும் பகுதி. எனவே அரசு ராமநாதபுரம் மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆண்டுதோறும் பல கோடி ரூபாயினை அரசு நலத்திட்டங்களுக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் வழங்கி வருகிறது. மத்திய அரசும் தன் பங்கிற்கு தேவையான நிதியினை அவ்வப்போது ஒதுக்கீடு செய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பள்ளி

மத்திய மாநில அரசுகளால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு  ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் முறையற்ற வகையில் செயல்படுத்தப்படுவதால் மக்களின் பணம் வீணடிக்கப்படுவதுடன், மக்கள் உயிருக்கும் உலை வைப்பதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க 43.40 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. காங்கிரீட் கலவையால் கட்டப்பட வேண்டிய தடுப்பு சுவர் கடற்கரை ஓர மணலை கொண்டு முறைகேடாக கட்டப்பட்டது. மணலால் கட்டப்பட்ட இந்த தடுப்பு சுவர் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சில நாட்களிலேயே கடல் அலைகளினால் அரிக்கப்பட்டு சேதமடைந்தது.  இது குறித்து செய்தி வெளியான நிலையில் மணல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டு  முறையாக கட்டப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் புதிய பள்ளி கட்டிடம்

இந்நிலையில் திருப்புல்லாணி ஒன்றியத்தில்  திறப்பு விழா கண்டு 18 மாதங்கள் கூட  நிறைவடையாத அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் ஒன்று முறையாக கட்டப்படாததால் பள்ளி மாணவர்களை பழி கொள்ளும் நிலையில் இருந்து வருகிறது.

ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி யூனியனை சேர்ந்த தினைக்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. தினைக்குளம் ஜமாத் நிர்வாகத்தினால் தானமாக வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் இயங்கி வரும் இப்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு மேல் நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தினைக்குளம் மற்றும் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை சேர்ந்த 680 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதனால் கூடுதல் வகுப்பறைகள் தேவையான நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நபார்டு திட்ட நிதியின் மூலம் ரூ.1.20 கோடி செலவில் 11 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வு கூடங்களுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. கட்டுமான பணிகளின் போது முறையற்ற வகையில் கட்டிடம் கட்டப்படுவதாக ஊர் மக்கள் சார்பில் புகார் கூறப்பட்டது. ஆனால் அதனை கண்டு கொண்டு கொள்ளப்படாமல் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 18-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

சேதமடைந்த பள்ளியை தாங்கி நிற்கும் தூண்

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் போது இந்த புதிய பள்ளிக்கட்டிடத்தின் மேல தளத்தில் தண்ணீர் தேங்கிய நிலையில் கட்டிடத்தின் உட்புற பூச்சுகள் பெயர்ந்து விழ துவங்கின. மேலும் கட்டிட வராண்டா பகுதியில் உள்ள தூண்களில் இருந்த சிமெண்டு (?) பூச்சுகள் பெயர்ந்து சுவரின் உட்புறம் உள்ள இரும்புகம்பிகள் எல்லாம் வெளியே தெரிய துவங்கின.

இதனால் அச்சம் அடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில் பள்ளிக்கட்டிடத்தின் நிலையை அறிந்த அவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதனை தொடர்ந்து ஊர் கூட்டம் போடப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள புதிய கட்டிட பகுதிக்குள் மாணவர்களை அனுப்பாமல், மரத்தடியில் வைத்து பாடம் எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும் கட்டி முடிக்கப்பட்டு 18 மாதங்களில் பல் இளிக்க  துவங்கிய கட்டிடம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. இதன் பின் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் 'கட்டிடம் நல்ல நிலையில் இருப்பதாக' கூறியுள்ளனர். நீங்கள் அளிக்கும் உறுதியை எழுத்து பூர்வமாக தருமாறு கிராம மக்கள் கேட்டதற்கு 'அவ்வாறு எழுதி தர முடியாது' என கூறிவிட்டு சென்று விட்டனர்.

 இதனால் சேதமடைந்த அந்த கட்டிடத்தின் முன் பகுதியில் 'பள்ளிக்கட்டிடம் பழுதடைந்துள்ளதால் இப்பகுதியில் யாரும் பிரவேசிக்க வேண்டாம்' என அறிவிப்பினை கட்டி வைத்துள்ளனர். மாணவர் நலனுக்காக அரசு  தந்த நிதி வீணடிக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் மீண்டும் மரத்தடியே கதி என கொண்டு பாடம் பயின்று வருகின்றனர்.

ஆனால் முறையற்ற வகையில் கட்டிடத்தை கட்டி தனது பாக்கெட்டினை நிரப்பி கொண்டு நிம்மதியாக சொகுசு வாழ்க்கை அனுபவித்தும், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி கொண்டும் இருக்கும்   ஒப்பந்தகாரர் மீதும்  அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும், உயிர்களை பழி வாங்க காத்திருக்கும் கட்டிடங்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.