வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (14/01/2018)

கடைசி தொடர்பு:13:20 (14/01/2018)

செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதையில் விரைவில் ரயில்சேவை தொடக்கம்!

செங்கோட்டை-புனலூர் இடையேயான மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு நிறைவடைந்த நிலையில், விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சோதனை ஓட்ட ஆய்வு பணிகள்

தமிழகத்தையும் கேரளாவையும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக இணைக்கும் செங்கோட்டை-புனலூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. மலையில் பாதை அமைக்க வேண்டியதிருந்ததாலும், பாரம்பரியம் மிகுந்த 13 கண் பாலம், குகைப்பாதை போன்றவற்றில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றதாலும் இந்தப் பணிகள் மெதுவாகவே நடைபெற்றன. 

செங்கோட்டை-புனலூர் இடையே 50 கி.மீ தூரத்தை அகலரயில் பாதையாக்கும் பணிக்காக ரூ.358 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப் பாதையில் 8 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இதில், செங்கோட்டை, பகவதிபுரம், நியூ ஆரியங்காவு நிலையங்கள் இடையே உள்ள 19 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதையுடன் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. அங்கிருந்து எடப்பாளையம், கழுதுருட்டி, தென்மலை இடையிலான 8 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. 

செங்கோட்டை-புனலூர்  ரயில் பாதையில் மலைகளைக் குடைந்து மொத்தம் 5 குகை பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றதுடன், புதிதாக 165 மீட்டர் நீளத்துக்கு குகை அமைக்கப்பட்டது. அத்துடன், மீட்டர் கேஜ் பாதையின் போது இருந்த வளைவுகளைச் சரிசெய்யும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன.

வளைவுப் பாதை

இந்த வழித்தடத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், தண்டவாளத்தின் உறுதித் தன்மை, தரம், பலம், சிக்னல்கள், ரயில் நிலைய கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கடந்த இரண்டு தினங்களாக ஆய்வு செய்தார். 

இந்த நிலையில், நியூ ஆரியங்காவு ரயில் நிலையம் முதல் எடமண் ரயில் நிலையம் வரையிலும் அதிவேக ரயில் சோதனை நடத்தப்பட்டது. தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், கோட்ட மேலாளர் நீனு இட்டாரியா ஆகியோர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். குகை பாதைகள், 13 கண் பாலம், வளைவுகள் ஆகிய இடங்களில் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் யாரையும் அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. 

பின்னர் பேசிய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், ’’இந்த ரயில் பாதையின் உறுதித் தன்மை குறித்த அறிக்கையை அடுத்த இரு வாரத்தில் அதிகாரிகளிடம் அளிப்பேன். சோதனையின் போது பெரிய குறைகள் எதுவும் தென்படவில்லை. அதிக பாலங்கள், திருப்பங்கள் இருந்ததால் ரயிலை 35 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கி சோதனை செய்து பார்த்தோம். இந்த சோதனை திருப்திகரமாக இருப்பதால், இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே ரயில் சேவை தொடங்கும்’’ என்றார்.