வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (14/01/2018)

கடைசி தொடர்பு:11:16 (15/01/2018)

தொல்லியல் இடங்களில் இனி கட்டடம் கட்டலாம்.! – என்ன சொல்கிறது சட்டத்திருத்தம்?

கடந்த 9-ம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா லோக்சபாவில் ஒரு மசோதாவைத் தாக்கல்செய்தார். `பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டத் திருத்த மசோதா 2017`அது. மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, `மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலனைசெய்ய வேண்டும். இந்த மசோதா மூலம் மத்திய அரசு நன்மை தேடிக்கொள்ள முயற்சிக்கிறது` என்று பேசினார். மசோதா லோக்சபாவில் `பாஸ்` செய்யப்பட்டது!

1958ல் கொண்டுவந்த சட்டம் :

இந்தியா முழுவதிலும் உள்ள பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களை மத்திய மாநில அரசுகள் தங்களில் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் சுற்றுலாத்தளங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் பாதுகாக்கும் நோக்கோடு 1958ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்ததே ‘பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் – 1958`. வரலாற்றுச் சின்னங்களாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சேதம் விளைவித்தாலோ கடுமையான தண்டனைகள் கொடுக்க வழிவகை செய்கிறது இச்சட்டம். கூடவே, 100மீட்டர் வரை எந்த கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று அழுத்தமாக சொல்கிறது இச்சட்டம். பல நூறுவருட பழமையான நினைவுச்சின்னங்களுக்கு அருகே கட்டுமான வேலைகள் நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் நினைவுச் சின்னங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே இதற்கு காரணம். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தத்தின் படி, வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். 100மீட்டருக்கு அப்பால் தான் கட்டுமானப் பணிகள் நடக்க வேண்டும் என்ற விதியை அகற்றியுள்ளது மத்திய அரசு. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகிறார்கள்.

அரசு மட்டுமே கட்டுமானப் பணி செய்யும்.!

மசோதாவை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, `இந்த சட்டத்திருத்தம் தனி நபருக்கோ, தனியாருக்கோ சாதகமானது அல்ல. அரசு மட்டுமே கட்டுமானப் பணிகள் செய்யும்.!` என்று பேசினார். பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் – 1958ன் பிரிவு 20(A)ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் படி, `இந்த திருத்தின் மூலம் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.!` என்று பொதுவான ஓர் காரணத்தை சொல்கிறது மத்திய அரசு.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கணக்கின் படி, இந்தியா முழுவதும் 3,686 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதில் பெரும்பாலான நினைவுச்சின்னங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில காணாமல் போய்விட்டன.! இப்படி ஒரு சூழலில், எஞ்சிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் என்னென்ன பாதுகாப்பு பணிகளை செய்யலாம், என்னென்ன பராமரிப்புப் பணிகளை செய்யலாம், ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை எப்படி மீட்கலாம் என்று யோசிக்காமல், கட்டிடம் கட்ட அனுமதியளித்திருக்கிறது மத்திய அரசு. இதனால் பல வரலாற்றுச் சின்னங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

100மீட்டருக்கு அப்பால், கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற விதியை மத்திய அரசு அகற்றுவதன் மூலமும், `மக்கள் தேவை` என்ற கருத்தை முன்வைப்பதன் மூலமும் வரும் காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு பாலம் கூட கட்டலாம்.!


டிரெண்டிங் @ விகடன்