வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (14/01/2018)

கடைசி தொடர்பு:14:29 (14/01/2018)

’பொள்ளாச்சி தென்னந்தோப்புகள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்!’ - வெப்பக் காற்று பலூனில் ஓர் 'த்ரில்' 'ஜில்' பயணம்

ஊஷ்ஷ்ஷ்…. ஊஷ்ஷ்ஷ்… என்று தீப்பிழம்புகள் பீறிட்டு புறப்படத் தயாராக, காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறக்கின்றன வெப்பக் காற்று பலூன்கள். வெளிநாடுகளில் இந்தக் காட்சிகள் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், தமிழகத்துக்கு இவை புதிது. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, பொள்ளாச்சியில் 4-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச பலூன் திருவிழாவில்தான் இந்தக் காட்சிகள். தினசரி காலை, மாலை என்று இரண்டு வேளைகளும், பிரமாண்ட பலூன்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

இந்த முறை உலகம் முழுவதும் இருந்து, 12 பலூன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் நியூ என்ட்ரியாக எந்திரன் 2.0 பலூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை டேக் ஆஃப் செய்வதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலட்கள் பொள்ளாச்சிக்கு லேண்ட் ஆகியுள்ளனர். வருகின்ற 16-ம் தேதி வரை சக்தி மில்ஸ் மைதானத்தில் இந்தத் திருவிழா நடக்கிறது.

ரெய்டு அனுபவத்துக்காக, திருவிழா நடக்கும் மைதானத்துக்குச் சென்றோம். ஒரு பலூனில் பைலட்டுடன் சேர்த்து, 4 பேருக்கு மட்டுமே அனுமதி. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே, பலூனை பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளில், பைலட்டுகளும், வாலன்டியர்ஸ்களாக உள்ள மாணவர்களும் இறங்கி விடுகின்றனர்.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

பலூனில் ஏறும்போது, இது முதல்முறையா?.. என்று கேட்டுவிட்டு, பலூன் பறப்பதற்கு தகுந்தது போல, நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, சொல்லிக் கொண்டே வருகிறார் பைலட். 100…500...1000... அடிகளைத் தாண்டி, பலூன் செல்லும்போது, ஹாரன், மனிதர்கள், நிறுவனங்கள் என அனைத்து ஒலிகளும் சைலென்ட் மோடுக்குப் போக, காற்றுடன் காற்றாக கலந்து கரைந்து பேரமைதி தொற்றிக் கொள்கிறது.

காற்றின் திசையைக் கண்டறிந்து, பைலட்கள் ஊஷ்...ஊஷ்... என்று தீப்பிழம்புகளை பறக்கவிடும் ஒலி மட்டுமே கேட்கிறது. கீழே பொள்ளாச்சியின் அடையாளமான தென்னந்தோப்புகள் மட்டுமே தெரிகின்றன. சராசரியாக 1,500 அடி உயரத்துக்கு பலூன் பறக்கிறது. அவரது வேலையைப் பார்த்துக் கொண்டே, புன்சிரிப்பு மாறாமல் நமக்கு அனைத்தையும் விளக்கியபடியே வந்தார் பைலட் மரியா.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

3-5 கி.மீ தூரம் சென்ற பிறகு, காற்றின் திசையைப் பொறுத்து லேண்டிங் ஏரியாவை தேர்ந்தெடுக்கிறார் பைலட்.  டேக் ஆஃப் மட்டுமே திட்டமிட்டப்பட்டது. லேண்டிங் என்பது இயற்கையை பொறுத்துத்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சி பலூன் திருவிழாவில், வெப்ப காற்று பலூனிலியே ஊறிப்போன ஒரு பைலட், கேரளாவில் லேண்ட் செய்துள்ளார். லேண்டிங்தான் பயணத்தில், மிகவும் அழகான ஓர் தருணம். நிலத்தை உரசி முத்தமிட்டு, மூன்று முறை ஜம்ப் அடித்தடி முடிகிறது பயணம்.

ஒவ்வொரு பலூனுக்கும், ஒரு வாலன்டியர் டீம் மற்றும் ஒரு டெம்போ இருக்கும். லேண்ட் ஆனப்பிறகு, தகவலை தங்களது டீமுக்கு கொடுத்தால், சம்பவ இடத்துக்கு வந்து, நம்மை மீண்டும் டேக் ஆஃப் ஆன மைதானத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றது அந்த டீம். லேண்டிங்கில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், எது எங்கு லேண்ட் ஆனாலும், அருகில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் அதை பார்த்து, பரவசப்பட்டு செல்கின்றனர்.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

ஏரோ பிளானை எல்லாம், தற்போது, அனைத்துத் தரப்பு மக்களும் ஆச்சரியத்துடன் பார்ப்பதில்லை. ஆனால், இந்த பலூனில் செல்வதற்காகவும், அதை வேடிக்கை பார்ப்பதற்காகவும் கார்களில் வந்து செல்கின்றனர். "ஹாட் ஏர் பலூனை, ஹேண்டில் பண்றது அவ்ளோ ஈஸி  இல்ல ப்ரோ" என்று நம்மிடம் விளக்குகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மரியா என்ற பைலட்.

"எனக்கு இப்போது 55 வயசாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அழகிய நாளில்தான், நான் வெப்ப காற்று பலூனில் சென்றேன். மரியாஅப்போதே பைலட் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். இதற்கு லைசென்ஸ் வாங்குவதற்கு, பயிற்சி வகுப்பு சென்று, ரிட்டன் மற்றும் பிராக்டிக்கல் எக்ஸாம்களை எல்லாம் க்ளியர் செய்ய வேண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து, பைலட்டும் ஆகிவிட்டேன்.

மிகவும் அழகான, போதைத் தரக்கூடிய ஓர் பயணம் இது. உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், வெப்ப காற்று பலூனில் பறக்க ஆசை. காற்றின் திசையை நன்கு அறிந்து, செல்வதுதான் இதில் உள்ள பெரிய சவால். அதுதான், இது மீது என்னைப் போன்றவர்களை பைத்தியமும் ஆக்கியது" என்று வெப்ப காற்று பலூன்மீதான தனது காதலைப் பற்றி சொன்னார் மரியா.

பெனடிக்பலூன் திருவிழாவின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பெனடிக்ட், "அமெரிக்காவில், 650 வெப்ப காற்று பலூன்கள் ஒரே நேரத்துல டேக் ஆஃப் ஆகும். வெப்ப காற்று பலூனுக்கென்றே ஒரு பெரிய கூட்டம் அங்கிருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான், கொஞ்சம், கொஞ்சமாக இதுகுறித்து தெரிய ஆரம்பித்துள்ளது. ஒரு ஹாட் ஏர் பலூனை தயார் செய்வதற்கு சுமார் 80 லட்சம் வரை செலவாகும்.

பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதற்காகத்தான், சூரிய உதயமான சிறிது நேரத்தில், சூரிய அஸ்தமனத்துக்கு சற்று முன்பு மட்டும்தான் இயக்குவோம். அப்போதுதான், காற்றின் வேகம் சற்று குறைவாக இருக்கும். பறப்பதற்கு உகந்த வானிலை இல்லாவிடின், அந்த செஸனையே ரத்து செய்துவிடுவோம்" என்றார்.

பயண அனுபவம் எல்லாமே வாவ் சொல்லும் அளவுக்குத்தான் உள்ளது. ஆனால், இதன் கட்டணம்தான் பொதுமக்களை வேடிக்கை பார்ப்பதுடன் கடந்துவிட வைக்கிறது. காலை, 3-5 கி,மீ மெகா ரெய்டு செல்ல, பலூன் திருவிழாவுக்கு கான்ட்ரிப்யூட்டர் என்ற அடிப்படையில், ஒரு நபருக்கு 15 ஆயிரம் ரூபாயும், மாலை 100 அடி உயரத்தில் பறக்க, ஒரு நபருக்கு 1,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பலூன் திருவிழா

பலூன் திருவிழாவைப் பார்க்க, கோவை, உடுமலை, பழனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தெல்லாம் ஆர்வடத்துடன் வரும் மக்கள், கட்டணத்தை கேட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டதற்கு, "தற்போது ஸ்பான்ஸர்கள் குறைவாக உள்ளனர். அதனால்தான் இந்த ரேட். ஸ்பான்ஸர்கள் அதிகம் கிடைத்தால் இது மாறிவிடும். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்றனர்.

கட்டணத்தை மட்டும் கொஞ்சம் குறைத்தால், குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட சூப்பரான ஸ்பாட்டாக பொள்ளாச்சி பலூன் திருவிழா இருக்கும்.