வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/01/2018)

கடைசி தொடர்பு:13:45 (14/01/2018)

திருச்செந்தூரில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்!

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். 

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து தை மாதத்தின் முதல் நாளான இன்று முருகப் பெருமானை தரிசனம் செய்ய திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். 

சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகம், தை மாதப்பிறப்பு, கந்த சஷ்டி ஆகிய தினங்களை முன்னிட்டு முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதன்படி, தை மாத பிறப்பை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த முருகபக்தர்கள் குழுக்களாக பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். 

அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகன் திருவுருவப் படத்திற்கு பூஜை செய்தும், அலகு குத்தியும், காவடி தூக்கிய படியே பக்திப் பாடல்களைப் பாடியும், ஆடியும் கோவிலை வந்தடைந்தனர். தை முதல் நாளான இன்று பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணறிலும் புனித நீராடி  முருகப் பெருமானை வழிபடுதல் சிறப்பு என்பதால்   வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  கடற்கரை முழுவதும் பச்சை நிற உடை அணிந்த முருக பக்தர்களின் தலைகளாகக் காட்சி அளிக்கிறது. 

தைப் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைக்காக இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தை மாத பிறப்பை முன்னிட்டு, உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. காணும் பொங்கலை முன்னிட்டு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, 3 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் பரிவேட்டைக்காக வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி, வேட்டைவெளி மண்டபத்தில் பரிவேட்டை நிகழ்ச்சிக்குப் பின், ரத வீதிகள் வழியாக திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இன்று பொங்கல் திருநாள் மற்றும் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருக்கோவில் வளாகம், கடற்கரைப்பகுதி, நாழிக்கிணறு, காவடி மண்டபம், வள்ளிகுகை, அய்யா கோவில் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க