ஓசூரில் ரவுடி கடத்திக் கொலை! போலீஸார் தீவிர விசாரணை

தொழில் நகரமான ஓசூரில் ரவுடிகளுக்குள் முன்விரோதம் இருப்பதால் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றது. ஓசூரில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சேட்டு கடந்த 13-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, அவரது வீட்டில் இருந்தே கடத்தப்பட்டார். அவர் தங்கியிருந்த வீடு மற்றும் காரில் ரத்த கரைகள் காணப்பட்டது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்தநிலையில்,  ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு என்ற பிரேம் நவாஸ் வயது 36. ஓசூர் ராம்நகரில் தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலையிலும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாகக் கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொலை வழக்கிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 

இவைதவிர, சேட்டு மீது ஓசூர் காவல்நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தனது வீட்டிலிருந்த சேட்டை, மர்ம கும்பல் ஒன்று நேற்று அதிகாலை கடத்தியிருக்கிறது. அவருடன் தங்கியிருந்த யசோதா என்ற பெண் வெளியில் சென்றிருந்தநேரத்தில், இன்னோவா மற்றும் மாருதி ஜென் ஆகிய கார்களில் வந்த மர்ம நபர்கள், சேட்டை அடித்து உதைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் சேட்டு படுத்திருந்த இடத்தில் ரத்த கரை உள்ளது. மர்ம நபர்கள் வந்த கார்களின் ஒன்றான இன்னோவா கார் பழுதானதால், அதை சேட்டுவின் வீட்டின் முன் நிறுத்தி விட்டு, மற்றொரு காரில் அந்த கும்பல் சேட்டுவைக் கடத்திச் சென்றிருக்கிறது. 

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மாருதி ஜென் கார், 13-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கிருஷ்ணகிரி டோல்கேட்டைக் கடந்துள்ளது. மேலும், சேட்டுடன் இருந்த யசோதா என்ற பெண்ணிடமும் டி.எஸ்.பி சங்கர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், ‘சேட்டுவிற்கும், பிரபல ரவுடி கோபி-க்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. இதனால், அவரைக் கொலை செய்யும் நோக்கில் மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்தநிலையில், கடத்தப்பட சேட்டு ஓசூர்  -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி அடுத்துள்ள நல்லகாணகொத்தபள்ளி என்ற இடத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைதுண்டிக்கப்பட்டு சேட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். சேட்டுவின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!