வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (14/01/2018)

கேரள மருத்துவமனைகளில் இருக்கும் தமிழக மீனவர் உடல்கள்: டி.என்.ஏ மாதிரி வழங்க அறிவுறுத்தல்!

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களில் 15 பேரின் உடல்கள் கேரள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், மீனவர் உடல்களைப் புதைக்க அந்த மாநில அரசு முடிவு செய்திருப்பதால், காணாமல் போன தமிழக மீனவர்களின் உறவினர்கள் 15-ம் தேதிக்குள் டி.என்.ஏ மாதிரி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சஜ்ஜன்சிங் சவான்

குமரி மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தாக்கிய ஒகி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். பலர் கடலில் தத்தளித்த நிலையில், மீட்கப்பட்டனர். கடலில் உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போயிருப்பதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. 

இதுவரையிலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மீனவரது உடல் உள்ளிட்ட 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை உறவினர்கள் பெற்று முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். அத்துடன், அவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த உதவித் தொகை கிடைக்கவும் வழி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள மருத்துவமனைகளில் இன்னும் 15 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

அந்த உடல்களை வரும் 22-ம் தேதி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் காணாமல் போன குமரி மாவட்ட மீனவர்களின் உறவினர்கள் நாளைக்குள் (15-ம் தேதி)டி.என்.ஏ மாதிரியை கொடுக்குமாறு அறிவுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒகி புயலின் காரணமாக கடலில் மீன்பிடிக்க சென்று படகுகள் மூழ்கியதால் காணாமல் போன மீனவர்களில் இதுவரை 150 பேர் குறித்த தகவல் அறியப்படாமல் உள்ளது.

மீனவர் குறித்த அறிவிப்பு

புயல் தாக்கிய சில தினங்களுக்குப் பின் கடலில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கேரளா மாநில மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் தெரியாத 15 உடல்கள் தற்போது கேரள அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. 

கேரள அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள தகவல்படி அடையாளம் தெரியாமல் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் வரும் 22-ம் தேதிக்குப் பின்னர் புதைக்கப்பட உள்ளதாகவும், இதுவரை டி.என்.ஏ. மாதிரி வழங்காமல் உள்ள காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் நாளை (15-ம் தேதிக்குள்) கேரள மாநிலம் ராஜீவ்காந்தி பயோ டெக்னாலஜி மையத்தை தொடர்பு கொண்டு டி.என்.ஏ மாதிரி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை குமரி மாவட்ட மீனவர்கள் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.