நெல்லை பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்திய சுற்றுலா பொங்கல் விழாவில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். 

பொங்கல் விழாவில் வெளிநாட்டினர்

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் துறையும் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் நெல்சன் முன்னிலை வகித்தார். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 33 சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழாவில் பங்கேற்க வருகை தந்தனர். 

அவர்களை டி.ஆர்.ஓ முத்துராமலிங்கம் பாரம்பரிய முறைபடி நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஜெர்மன் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் இணைந்து புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில் பங்கேற்ற ஜெர்மன் பயணிகள் கூறுகையில், ’உழவுத் தொழிலுக்கு மரியாதை கொடுக்கும் இந்த விழா குறித்து அறித்து அதில் பங்கேற்க ஆர்வம் கொண்டிருந்தோம். எங்களுக்கு அதற்கான வாய்ப்புக் கொடுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி. இந்த விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்கள். 

பின்னர் பார்வையாளர்களுக்கு வில்வித்தைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மகளிருக்கும் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோடகநால்லூர் யோக் அமைப்பினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கற்பகவள்ளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறை உதவி அலுவலர் நித்ய கல்யாணி, அன்னைத் தெரசா அறக்கட்டளை நிர்வாகியான அந்தோணி குரூஸ் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!