சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.57 கோடி வருவாய்! -அசத்திய தென்னக ரயில்வே

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,221 சிறப்பு ரயில்களை இயக்கியதன் மூலமாக தென்னக ரயில்வே ரூ.56.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 

வருவாய் ஈட்டும் தென்னக ரயில்வே

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வே, 2017-2018-ம் நிதியாண்டியின் முதல் 9 மாத காலத்தில், கடந்த நிதியாண்டுகளைக் காட்டிலும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது. கடந்த 2016-2017 நிதியாண்டியின் இதே காலகட்டத்தில் 639 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,212 சிறப்பு ரயில்களை இயக்கி இருக்கிறது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். 

இதில், 478 சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டுள்ளன.  436 சிறப்பு ரயில்கள் குமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. 307 சிறப்பு ரயில்கள் பிற பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கையும் நடப்பு நிதியாண்டில் 6.65 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தென்னக ரயில்வேக்கு 56.87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. 

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகள் எண்ணிக்கை 71 சதவிகிதமும், வருவாய் 51 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் மேலும் 240 சிறப்பு  ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இதுவரையிலும் 2,060 கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைத்ததன் மூலமாக மட்டும் 1.05 லட்சம் பயணிகள் பலன் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!