“விரைவில் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவோம்”!- இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை

மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் தொடங்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோவின் புதிய தலைவராகப் பொறுபேற்றுள்ள சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையின் சாதனைகள் சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சார்பாக 100-வது செயற்கைக் கோளான பி.எஸ்.எல்.வி சி-40 என்ற புதிய செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ மையத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்று இருக்கும் சிவன், இந்த வெற்றிக்குப் பின்னர் இன்று திருவனந்தபுரம் வந்தார். புதிய பொறுப்பேற்றுத் திரும்பும் அவருக்கு விமான நிலையத்தில் சக விஞ்ஞானிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நமது விண்வெளித் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதே சமயத்தில் விண்வெளித்துறையின் வளர்ச்சியானது, சாதாரண மக்களுக்குப் பயன் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனேயே விஞ்ஞானிகள் அனைவருமே செயல்பட்டு வருகிறார்கள். இஸ்ரோ மையம் கேரள அரசுடன் இணைந்து மீனவர்களுக்கு உதவும் வகையில், நாவிக் என்ற புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது போல சாமன்ய மக்களுக்கான தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம். 

இன்னும் கூடுதலாக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியும் வேகமாக நடைபெறுகிறது. அதனால் அடுத்த மாதம் அல்லது மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!