வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (14/01/2018)

கடைசி தொடர்பு:15:55 (27/06/2018)

ஒரு கிராமம்..புதிய மதம்..சில ஆச்சரியங்கள்! - இது 'மெய்வழிச்சாலை' கிராமத்தின் கதை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது 'மெய்வழிச்சாலை' என்ற கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் ஒரு புதிய மதத்தின் அடையாளத்துடனும் வித்தியாசமான உடை அலங்காரத்துடனும் பழக்க வழக்கங்களுடனும் வலம் வருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களது பெயருக்கு முன்னால் 'மெய்வழிச்சாலை'என்று சொந்த கிராமத்தின் பெயரை கட்டாயமாகப் போட்டுக்கொள்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் இவர்கள் இந்த பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஊருக்கு வந்து ஒன்று கூடி,பொதுப் பொங்கல் வைத்து ஒன்றாக உண்கிறார்கள். இன்னும் பல ஆச்சரியங்களைக் கொண்ட தங்களது சமூகம் பற்றி 'மெய்வழிச்சாலை' மாணிக்கம் என்பவர் விவரித்தார்.

"1940-ம் ஆண்டில் மதுரையிலிருந்து வந்த காதர்பாட்சா என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரிடமிருந்து 99- ஏக்கர் நிலத்தை வாங்கி, இந்தக் கிராமத்தை உருவாக்கினார். அவர் புதிதாக 'மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்' என்ற ஒரு புதிய மதத்தையும் தோற்றுவித்தார். அந்த மதத்தைத் தழுவியவர்கள்தான் நாங்கள் எல்லோரும். அந்த மதத்தின் விதிமுறைகளின்படி, ஆண்கள் மதத்தின் வேதங்களைப் பயில வேண்டும்,காவி வேட்டியை தார்ப்பாய்ச்சிக் கட்ட வேண்டும், தலையில் முண்டாசு அணிய வேண்டும், அதில் பிறை குத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், வழிபாடு நேரத்தில் மட்டும் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்று அழைக்கப்படுவார்கள். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மூன்று மதங்ககளில் இருந்து வந்த 69 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த 'மெய்வழிச்சாலை' மதத்திலும் இந்தக் கிராமத்திலும் இருக்கிறார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களுடைய பெயருக்கு முன்னால் கட்டாயமாக, 'மெய்வழிச்சாலை'என்று போட்டுக்கொள்ள வேண்டும்.


எங்கள் ஊருக்குள் மின்சாரம் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் தொழில்,வேலை நிமித்தம் வெளியூரில் இருப்பவர்கள் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமத்துக்கு வந்துவிட்டால் மின்சாரம் இல்லாமல்தான் இருக்க வேண்டும். ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை எங்களின்  வீடுகள் குடிசைகள்தான்.  மணல் தரை. ஐந்தடி உயரமுள்ள சுவர் மட்டுமே இருக்கும். அந்த குடிசைகளுக்கும் கதவுகள் போடுவதில்லை அப்படியே கதவுகள் இருந்தாலும் பூட்டு போட மாட்டார்கள். 

சிலர் நாகரீகம் கருதி தரையை இப்போது சிமெண்ட் தரையாக மாற்றியிருக்கிறார்கள். மெய்வழிச்சாலைக்குள் அரசு மின் இணைப்பு தர முன்வந்தது. நாங்கள் மறுத்து விட்டோம். இப்போதுதான் கிராம நலன் கருதி தெருக்களில் சோலார் மின் விளக்கு இணைத்திருக்கிறோம்.
உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், பொங்கல் அன்று அத்தனை சாலை அனந்தர்களும் இங்கு கூடி விடுவோம். ஆயிரக்கணக்கானோர் இணைந்து இங்குள்ள பொன்னரங்க ஆலயத்தில் பொங்கல் வைப்போம். அனைவருக்கும் ஒரே அளவிலான பொங்கல் பானை தரப்படும்.
ஆலயத்துக்கு எதிரில் நீளமான அடுப்பில் எல்லோரும் பொங்கல் வைத்து முடிந்ததும் வரிசையாக பானைகள் ஆலயத்தில் வைத்து
ஒவ்வொரு பானையில் இருந்தும் ஒரு கரண்டி பொங்கலை எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.'கலந்து தரப்பட்டஇந்தப் பொங்கலைப் போல நாமெல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்' என்பதை உணர்த்தவே இந்தப் பிரசாதம். இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கும். பக்திப் பாடல்கள் பாடுவார்கள். வாத்தியங்கள் இசைக்கப்படும். பெண்களும் நடனமாடுவார்கள். மறுபடியும் அடுத்த வருடம் பொங்கலுக்குத்தான் ஒன்று கூடுவோம்"என்று நீளமாக சொல்லி முடித்தார்,'மெய்வழிச்சாலை 'மாணிக்கம். நமக்கு தட்டிய பிரமிப்பு நீங்குவதற்கு நீண்ட நேரம் ஆயிற்று.