வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (14/01/2018)

கடைசி தொடர்பு:18:48 (09/07/2018)

கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் மீனவர்கள்

உழவுக்கு உதவும் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடுவது போல் தாங்கள் மீன்பிடித்து வாழ வழிசெய்யும் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் மீனவர்களின் பாராம்பரிய பொங்கல் திருநாள் ராமநாதபுரம் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் உற்சாகமாக கொண்டாடபட்டது.

கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபடும் மீனவர்கள்
 

தமிழர்களின் நாட்டார் வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்குரிய கடவுளாக பெண் விளங்குகிறாள். அதற்குக் காரணம் வளமை மற்றும் வலிமையின் அடையாளமாகப் பெண்களை தமிழ்ச் சமூகம் கருதியது தான். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றியக் குறிப்புகளும் அதிகமுள்ளன. அனைத்து மனித உயிர்களுக்கும் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. நதிகள், நாடுகள் ஆகியவை பெண்களின் பெயரால் வழங்கப்பட்டு வருவதும் பெண்ணை தெய்வமாக மதிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.
வளமை வழிபாடான ஏழு கன்னியர் எனப்படும் சப்த கன்னியர் வழிபாடு, உழவுத்தொழில் செழிக்க, செல்வம் பெருக, குழந்தைகள் நோயின்றி வளர, தொழில் சிறக்க அனைவராலும் வழிபடப்படுகிறது. இவ்வழிபாடு தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் காணப்படுகிறது. இதனை போன்றே தாங்கள் வாழ துணை புரியும் கடலுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைக் கொண்டு பொங்கல் வைக்கச் செய்து, தங்களுக்கு மீன்வளம் தரும் கங்காதேவியாக  திகழும் கடலை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை  கிராம மக்கள்.

ராமநாதபுரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம்.  இந்தக் கிராமத்திலுள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவ சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஊர் கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட 7 சிறுமிகளைத் தேர்வு செய்கின்றனர். வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஜெயஶ்ரீ, சானியாமிஸ்ரா, சமயகிருத்திகா, அஜேதா, ஹரிணி, சமயராகவி, நிதி ஆகியோருக்கு சிறப்பு மரியாதை செய்து ரணபத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தார்கள். அதன் பின் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரகச் செம்புகளோடு, ஏழு வாழையிலைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்குப் படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்னம்பாளையில் செய்யப்பட்ட சிறிய பாய்மரப் படகில் பூசைப்பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள். இவற்றுடன் கிராமத் தலைவரிடம் கொடுக்கப்படும் அந்த சிறு படகுடன் முன் செல்ல சப்த கன்னியர்களான அச்சிறுமியர் கரகச் செம்பை தலையில் ஏந்தி பின் செல்ல மேளதாளத்துடன் கடலை நோக்கிச் செல்லும் அவர்கள், கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை கடலில் விட்டு விட்டு, கரகச் செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலை கங்காதேவியாக வழிபடும் கடலில் கொட்டி வழிபட்டனர்.

தை முதல் நாளில் நடந்த இந்த நன்றி செலுத்தும் விழாவில் கிராமத் தலைவர் வெள்ளி கருப்பு, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, சமூக ஆர்வலர் துரைபாலன்  மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.விவசாயப் பெருமக்களால் உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருக்கும் சூரியன், காளைகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் மோர்ப்பண்ணை மீனவர்களால் தங்கள் வாழ்வை வளமாக்கும் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தி வணங்கும் திருநாளாக கொண்டாடப்படுவது தனித்துவமான நிகழ்வாகும்.