ஆதரவற்ற முதியோருடன் பொங்கல் கொண்டாட்டம்

தமிழரின் முதன்மைத் திருவிழாவான பொங்கல் திருநாளை உலகம் முழுதும் தமிழர்கள் உற்சாகமாக இன்று கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின் தமிழ்ப் பண்பாட்டை, நீண்ட வரலாறுகொண்ட தமிழர்களின் வாழ்வியலை மீட்டெடுக்க வேண்டுமென்ற சிந்தனை இக்கால இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டதைக் காணமுடிகிறது. அதேபோல மனிதாபிமான விஷயங்களிலும் இளைஞர்கள் ஆர்வமாகச் செயல்பட்டுவருகிறார்கள்.

ஆதரவற்ற முதியோருடன்

பிள்ளைகளாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டு சேவை இல்லங்களில் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் முதியோர்களை, தங்களுடைய தாத்தா பாட்டிகளாக நினைத்து அவர்களுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள், மதுரையைச்சேர்ந்த இளைஞர்கள்.

சென்னை, மதுரை உட்பட பல நகரங்களில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துகொண்டிருக்கும்  இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, 'படிக்கட்டுகள்' என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள். இதன் முக்கிய நோக்கம்,ஆதரவற்றவர்களுக்கு உதவுவதுதான். ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியோர்களுடன் பண்டிகை நாள்களைக் கொண்டாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

இன்று, பொங்கல் திருநாளை மதுரையிலுள்ள நேத்ராவதி நிவாரண மையத்தில் உள்ள  தாத்தா பாட்டிகளுடன் அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்கிக்கொடுத்து, பொங்கல்வைத்து அவர்களுடன் கொண்டாடினார்கள்.

இதனால், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை மறந்து  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் முதியோர்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் நண்பர்கள்மூலம்  திரட்டியதாகச் சொன்னார்கள்.  இளைய தலைமுறையினரின் இது போன்ற செயல்கள் நம்பிக்கை அளிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!