எம்.எல்.ஏ-வுக்கு ஆத்மதிருப்தி தந்த பொங்கல்..!

தனது கிராம மக்கள் அனைவருக்கும் புத்தாடை வழங்கி, பொங்கல் கொண்டாடிய எம்.எல்.ஏ., அவரது நீண்டநாள் ஆசை நிறைவேறியது என்று மன நிறைவுடன் தெரிவித்தார்.  

நாகை மாவட்டம் சீர்காழி (தனி) தொகுதியின் ஆளும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பாரதி.  அவர், அவரது சொந்த ஊரான மங்கைமடத்தில் நேற்று கிராம மக்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.  கிராமத்திலுள்ள ஆண்கள், பெண்களுக்கு வேட்டி, சட்டை, புடவை, ஜாக்கெட் அடங்கிய பரிசுப் பொருள்களுடன் ரூ.100 அன்பளிப்பும் கொடுத்து மகிழவைத்தார்.  

இதுபற்றி உஷா என்ற பெண்மணியிடம் பேசியபோது, "எம்.எல்.ஏ., எல்லோரையும் கூப்பிடுவதாகச் சொன்னதும் நாங்கள் ஏதோ செய்தி சொல்லப்போகிறார் என்று நினைத்துதான் வந்தோம்.  ஆனால், இப்படியொரு பரிசு கொடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  இது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார்.  

பாரதி எம்.எல்.ஏ., "நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.  என்னை இந்தளவுக்கு ஆளாக்கியவர், அம்மா.  தமிழகம் முழுவதும் எங்கள் அரசு பொங்கல் பரிசு கொடுத்தாலும், எங்கள் ஊர்க்காரர்களுக்கு புதுத் துணிமணி வாங்கிக்கொடுத்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை.  கடந்த ஆண்டு அம்மா இறந்ததால் செய்யமுடியவில்லை.  இந்த  ஆண்டு சிம்பிளாகச் செய்துள்ளேன்.  இதெல்லாம் விளம்பரத்துக்காக இல்லை. என்னோட ஆத்மதிருப்திக்கு" என்றார் அடக்கமாக.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!