வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/01/2018)

கடைசி தொடர்பு:16:40 (09/07/2018)

' ஜல்லிக்கட்டு நடத்த ஏகப்பட்ட கெடுபிடிகள்'- அதிருப்தியில் மாடுபிடி வீரர்கள்

"போன வருடம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, நம்முடைய பாரம்பர்ய உரிமையைத் தக்கவைத்துக்கொண்டோம். ஆனால், பல வருடங்களாகவே லோக்கல் போலீஸிடமிருந்து அந்த உரிமையை எங்களால் இன்னமும் மீட்டெடுக்க முடியவில்லை" என்று அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள், புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள்.

ஜல்லிக்கட்டுக்கு மதுரை மாவட்டம்தான் பிரபலம் என்றாலும், தமிழ்நாட்டிலேயே அதிக அளவு ஜல்லிக்கட்டு நடப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான். கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்து. உரிமையை மீட்டெடுத்த உடனேயே மாவட்டம் முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டை நடத்தி அசத்தினார்கள் இந்த மாவட்டத்துக்காரர்கள். இந்த வருடம், 200-க்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்திவிட வேண்டும் என்று பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தபோதுதான் போலீஸ் தரப்பிலிருந்து ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக, 'சலம்பல்' கேட்கத்தொடங்கிவிட்டது. "கீரனூர், திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதில் பேசிய அந்தந்தப் பகுதி டி.எஸ்.பி-க்கள், "அதிகமான காளைகளை அனுமதிக்க முடியாது. காளையின் பின்னால், அதன் உரிமையாளரும் உதவியாளர் ஒருவரும் மட்டுமே வரவேண்டும். உள்ளூர் மாடுபிடி வீரர்களை மட்டுமே அனுமதிக்க முடியும். அவர்களும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். அதிகபட்சமாக, நான்கு மணி நேரத்துக்குள் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி முடித்துவிட வேண்டும்'' என்றெல்லாம் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கிறார்கள். இவர்கள், புதிதுபுதிதாக விதிமுறைகளைக் கொண்டுவருகிறார்கள். இதனால், ஜல்லிக்கட்டு நடத்தும் கமிட்டி உறுப்பினர்களும் மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் ரொம்பவே மனம் சோர்ந்துவிட்டார்கள்" என்கின்றனர் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள்.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம். "ஜல்லிக்கட்டு விழா வழிகாட்டும் விதிமுறைகள் என்று ஒன்று இருக்கிறது. தமிழகம் முழுக்க நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டுகளிலும் அந்த விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அதை நடைமுறைப்படுத்தக் கூறி எங்களுக்கு அறிவுறுத்துகிறது. அதையேதான் நாங்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கூறுகிறோம். புதிதாக எந்த விதிமுறைகளையும் வலியுறுத்தவில்லை" என்றார்கள்.