வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (15/01/2018)

20 ரூபாய் டோக்கனை பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கும்... ஆர்.கே. நகரில் அதிரும் போஸ்டர்


                           டோக்கன் கதை சொல்லும்  போஸ்டர்

என்னாது... 20 ரூபாய் டோக்கன் செல்லாதா? என்ற குரல்கள் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் கேட்க ஆரம்பித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில்  டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றி, ஆளுங்கட்சியையும் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க-வையும்  நிலைகுலைய வைத்தது பழைய கதை.  தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம், தொகுதியில் சுற்றிய  10 ஆயிரம் ரூபாய்க்கான 20 ரூபாய் அட்வான்ஸ் டோக்கன்தான் என்ற குற்றச்சாட்டும் அப்போது  பரவலாகச் சொல்லப்பட்டது.

டோக்கனை கையில் வைத்திருந்த பொதுமக்கள்,  டோக்கனுக்குப் பணம் கேட்டுப் போன இடத்தில், அல்வா பொட்டலமும் சில இடங்களில் அடி-உதையும்  கிடைத்தது. இந்நிலையில்தான்,   தொகுதி முழுவதும் அ.தி.மு.க-வினர்  ஒட்டிக்கொண்டிருக்கும் போஸ்டர்கள், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், ''அம்மாவின் நலத்திட்டங்கள் இல்லாத இல்லங்கள் இல்லை. ஆனாலும், இதயத்தைத் தொலைத்த எங்கள் ஆர்.கே.நகர் தொகுதி இனிய மக்கள், இருபது ரூபாயை மட்டும் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரின்மூலம் 20 ரூபாய் டோக்கனை வைத்திருப்பவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் இனி கிடைக்காது என்று மறைமுகமாகவும் உறுதியாகவும் சொல்லப்பட்டிருப்பதே மக்களின் அதிர்ச்சிக்குக் காரணமாகும்.