ஆயிரம் கிலோ பழங்களால் நந்தி சிலைக்கு அலங்காரம்..!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று காய்கறிகள் மற்றும் பழங்களால் நந்திக்கு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் தரிசிக்கவும் தஞ்சை மற்றும் இதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை புரிவார்கள்.

இன்று மாட்டுப் பொங்கல் என்பதால், சுரைக்காய், பூசணிக்காய், வெங்காயம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு விதமான காய்கறிகள், கிழங்கு வகைகள், கொய்யா, மாதுளை, பலா, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை கொண்டு நந்தி சிலை அலங்காரம் செய்யப்பட்டு இன்று மாலை விஷேச பூஜைகளும் செய்யப்பட்டன. இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தார்கள். நந்திக்கு செய்யப்பட்டுள்ள காய்கறி-பழங்கள் அலங்காரம் குறித்து பெரிய கோயிலில் உள்ள குருக்களிடம் பேசியபோது, 'உலக மக்கள் உயிர் வாழ, விவசாயம் தான் அடிப்படை ஆதாரம். விவசாயத்துக்கு காளை மாடுகள் பல வகைகளையும் உதவியா இருக்கு. இதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும், கவுரப்படுத்தும் விதமாகவும் தான் காளை வடிவில் உள்ள நந்திக்கு இந்த மண்ணுல விளையக்கூடிய விவசாய விளைப்பொருள்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரம் கிலோவுக்கு அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலங்காரத்தை இங்குள்ள அர்ச்சகர்கள் தான் செஞ்சோம். இதை செஞ்சு முடிக்க பத்துமணி நேரத்துக்கு அதிகமான நேரம் தேவைப்பட்டது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!