எல்லாவித நன்மைகளையும் அளிக்கும் தை அமாவாசை

மகர ராசியில் இருக்கும் சூரிய பகவானோடு திங்கள் சேரும் நாளே தை அமாவாசை. மகராசி சனீஸ்வரனுக்கு உரியது எனவே தை அமாவாசை வழிபாடு பித்ருக்களுக்கு மட்டுமல்ல, சனீஸ்வரனுக்கும் உகந்தது. உத்தராயன காலத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை. தட்சிணாயன கால ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து வரும் நமது பித்ருக்கள் ஆறு மாதங்கள் இங்கிருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம். இந்த தை மாத அமாவாசை அன்று தான் பித்ருக்கள் மனம் குளிர்ந்து நமது வழிபாடுகளை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ரு லோகம் செல்வதாக ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.

அமாவாசை

எனவே இன்றைய தை அமாவாசை தினத்தில் நீர் இருக்கும் தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பார்கள். சிலர் வீடுகளில் திவசம் கொடுப்பார்கள். எப்படியோ இன்று செய்யப்படும் பித்ரு பூஜைகள் நம் ஏழேழு தலைமுறைகளைச் சேர்ந்த மூத்தவர்களை மகிழ்விக்கச் செய்யும். அதனால் நம் வருங்கால சந்ததிகள் எல்லாவித நன்மைகளையும் பெறுவர்.

தை அமாவாசை

இந்த நாளில் சகல வித தோஷங்களையும் நீக்கும் பூஜைகளையும் செய்யலாம். குலதெய்வ வழிபாடு இந்த நாளுக்கு மேலும் சிறப்பினை அளிக்கும். பசுவுக்கும், காகத்துக்கும் உணவளித்து விட்டு ஆதரவற்ற மக்களுக்கு தானமளித்து விட்டு விரதம் முடிப்பது நல்லது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தை அமாவாசை நாளில் காவிரி கூடுமிடம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, வேதாரண்யம், திருவெண்காடு, மகாமக திருக்குளம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, பவானி கூடுதுறை, முக்கொம்பு, திருமயிலை, திருவையாறு, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மக்கள் கூடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். எல்லாவித நன்மைகளையும் அளிக்கும் தை அமாவாசை நாள் இன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!