அமாவாசை, பௌர்ணமியான அதிசயம் நடந்த நாள் | Abhirami Anthadhi and Thai Amavasya

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (16/01/2018)

கடைசி தொடர்பு:10:34 (16/01/2018)

அமாவாசை, பௌர்ணமியான அதிசயம் நடந்த நாள்

அன்று தை அமாவாசை, காவிரியில் நீராட வந்த முதலாம் சரபோஜி அரசர் திருக்கடவூருக்கும் வந்திருந்தார். அரசர் வந்திருக்கிறார் என்றதும் கோயில் பரபரப்பானது. அப்போதும் சுப்ரமணிய பட்டர் அம்பாள் சந்நிதியை விட்டு அகலவே இல்லை. இது, அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. 'ஏற்கெனவே, அரசர் வரும்போது பித்து என்ன செய்யுமோ' என்று அவரைக் குறித்து கவலைப்பட்டார்கள். அரசரும் அம்மனின் கருவறை நோக்கி வந்தார்.

திருக்கடவூர்

தம்முடைய வருகையைக் கண்டுகொள்ளாத பட்டரின் மீது அரசருக்கு ஆத்திரம் எழுந்தது. அப்போது, அர்ச்சகர்களும் 'சுப்ரமணிய பட்டர் ஒரு பைத்தியம்; அவரால் எல்லோருக்கும் அவஸ்தை' என்ற ரீதியில் புகார் தெரிவித்தனர். அவரின் சித்தத்தை அறிந்துக்கொள்ள அரசர் 'அன்று என்ன திதி' (நாள்) என்று வினவினார். அம்பிகையின் அழகு முகத்தைப் பூரண நிலவாக எண்ணிக் கண்மூடி இருந்த பட்டரின் காதுகளுக்கு, 'ஸ்திதி' (நிலை) என்று விழ, 'பௌர்ணமி' என்றார். அவ்வளவுதான் அரசர் கோபமாகி, இன்று இரவு முழு நிலவு வராவிடில் மரண தண்டனை என்று கூறிவிட்டார்.

'மன்னன் என்ன தண்டிப்பது, என்னைப் பேசவைப்பதே அபிராமிதானே' என்று அவளைச் சரணடைந்து, 100 கயிறுகள் தாங்கும் ஒரு ஊஞ்சலை அந்தரத்தில் கட்டிவைத்து ஏறிக்கொண்டார். கீழே ஆர்ப்பரித்து எழும் நெருப்பின் நாக்குகள். அபிராமி அந்தாதி ஒவ்வொரு பாடலாக எழுந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறு அறுந்து விழத் தொடங்கியது. பட்டரின் உயிரும் ஊஞ்சலோடு ஆடியது. 79-வது பாடல், ‘விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன’ என்ற பாடல் முடிந்ததும், அன்னை அபிராமி கருணைகொண்டாள்.

அபிராமி

தன் மகனைக் காக்க, காது குண்டலத்தை எடுத்து வானில் வீச, தகதகக்கும் முழு நிலவாய் மின்னிய அதிசயம் நடந்தது. மன்னர் பட்டரிடம் மன்னிப்புக் கோரினார். அப்போது முதல், சுப்ரமணிய பட்டர் 'அபிராமி பட்டர்' என்றும் மாறினார்.  சுமார் 290 ஆண்டுகளுக்கு முன்னர், தை அமாவாசை நாளில் நடந்த இந்த அதிசயம், அபிராமி அன்னையின் அளப்பரிய சக்தியைச்  சொல்லி நம்மை சிலிர்க்கவைக்கிறது. இந்த அதிசயம் நடந்த தை அமாவாசை நாளான இன்று, அபிராமியை வணங்கி, அவளுடைய அந்தாதியைப் பாடி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.