’மனசுக்கு நிறைவா இருக்கு!’ - துப்புரவுப் பணி செய்யும் பெண்கள் நெகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மானியாதஅள்ளி கிராமம், மிகப்பெரிய கிராமப் பஞ்சாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்தக் கிராமத்துக்கு பெண் துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பணியாற்றும் இவர்களுக்கு, மாதத்துக்கு  குறவான ஊதியம்தான் கிடைக்கிறது. இந்தப் பணியாளர்கள், காலை 10 மணிக்குத் தொடங்கி மதிய உணவு நேரம் போக மாலை 5 மணி வரை பணியாற்றுகின்றனர்.

துப்புரவு பணியாளர்கள்
 

ஊரில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தினமும் சென்று, தேவையற்ற பொருள்கள் மற்றும் குப்பைகளைச் சேகரித்து வருகின்றனர். குப்பைகளைச் சேகரிக்க, அவர்களுக்குத் தள்ளுவண்டிகள் தரப்பட்டுள்ளன. 


தேவையான மட்கும் குப்பைகளை உரமாக மாற்றிவிடுகின்றனர். தேவையற்ற மட்காத குப்பைகளை எறித்துவிடுகின்றனர்.

வீட்டு வேலையும் கவனித்துக்கொண்டு, நாள் முழுக்க வேலைசெய்வதில் உங்களுக்கு சிரமமாக இல்லையா என்று அவர்களிடம் கேட்டால், அவர்கள் ’மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று சிரித்துக்கொண்டே கூறுகின்றனர்.

மேலும், அங்கு பணியாற்றும் மாதம்மாள் என்பவர் கூறுகையில், ‘வீட்டிலேயே இருந்த எங்களுக்கு இது புதுவித அனுபவமாக இருக்கு, ஊரில் உள்ள அனைவரும் எங்கள் வண்டியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். நாங்கள் தினமும் செல்வதால், எங்களுடன்  நல்ல நட்புடன் பழகுகின்றனர். இன்னும் சிலர், அவர்களின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவை மகிழ்வோடு கொடுத்து உபசரிக்கின்றனர். 1000 வீட்டில் உள்ள பெண்களும் எங்களுக்கு நல்ல தோழிகள்.

அதுமட்டும் இல்லாமல் எங்கள் ஊர் மிகப்பெரியது. நாங்கள் இவ்வளவு பெரிய ஊரையே சுத்தமா வெச்சிருக்கோம். அதனால, யாருன்னே தெரியாதவங்ககூட எங்கள பாராட்டிட்டுப் போராங்க. இது, மனசுக்கு நிறைவா இருக்கு. நாங்க வேலைக்கு வந்தப்புறம் எங்க ஊரைச் சுத்தி அசுத்தமான ஒரு குப்பைய யாராலும் காட்டிட முடியாது. அப்படி ஏதாவது இருந்தா உடனே சுத்தம் பண்ணிடுவோம்’ என்கிறார் மாதம்மாள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!