வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (16/01/2018)

கடைசி தொடர்பு:09:59 (16/01/2018)

இளவட்டக் கல் தூக்கும் இளைஞர்களுக்கு சவால் விட்ட கிராமத்து வீராங்கனைகள்!

நெல்லையில் நடந்த பொங்கல் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் இளவட்டக் கல் தூக்கிய நிலையில், பெண்கள் நெல்குற்றும் உரலைத் தூக்கி தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினார்கள். இளம் பெண்கள் முதல் முதாட்டிகள் வரை அனைவரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொங்கல் விளையாட்டு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இருக்கிறது, வடலிவிளை கிராமம். விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இளைஞர்களுக்கு இளவட்டக் கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. வயதின் அடிப்படையில் 50 கிலோ, 80 கிலோ, 100 கிலோ எடைகொண்ட இளவட்டக் கல்லை இளைஞர்கள் ஆர்வத்துடன் தூக்கினார்கள். 

உருண்டையான இளவட்டக் கல்லை தரையிலிருந்து தூக்கி, கழுத்தைச் சுற்றி முதுகுப் பக்கமாக பின்னால் வீச வேண்டும் என்கிற போட்டியின் விதிமுறைப்படி, இளைஞர்கள் மிகச் சுலபமாக அதைத் தூக்கி எறிந்தனர். கல்லை 11 முறை தூக்கி எறிந்த தங்கராஜ் என்பவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இளவட்டக் கல்லை 8 முறை தூக்கி வீசிய முத்துப்பாண்டி, செல்லப்பாண்டி ஆகியோர் கூட்டாக இரண்டாம் பரிசை தட்டிச்சென்றனர். 

உரல் தூக்கிய வீராங்கனை

பின்னர், இளைஞர்களின் பல் உறுதியைச் சோதிக்கும் விதமாக, தேங்காயை பல்லால் கடித்து நார் உறிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதிலும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதையடுத்து, அனைவரையும் கவரும் வகையில் மகளிருக்காக நெல் குற்றும் உரலைத் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. 

ஆண்களுக்காக நடத்தப்பட்ட இளவட்டக் கல் தூக்கும் போட்டியைப் போன்று, பெண்களுக்காக நடத்தப்பட்ட உரல் தூக்கும் போட்டியில், 45 கிலோ எடை கொண்ட உரலை, பெண்கள் சற்றும் அசராமல் கழுத்து வரை தூக்கி, பின்புறமாக தரையில் போட்டனர். இந்தப் போட்டியில், இளம்பெண்கள் மட்டுமல்லாமல் முதியோரும் பங்கேற்றுத் தங்களின் மன பலத்தையும் உடல் உறுதியையும் வெளிப்படுத்தினார்கள்.