தை அமாவாசை! - ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி, முன்னோர்களுக்குப் படையலிட்டு வழிபட்டனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அமாவாசை தினத்தில் நீராடிய பக்தர்கள்

இந்துக்கள், மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள ஆறுகள், அருவிகள், கடல்களில் புனித நீராடுவது வழக்கம். இதில் ஆடி, புரட்டாசி, தை மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் முக்கியமானவையாகும். இவற்றில், தை அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று கடைப்பிடிக்கப்படும் அமாவாசை, உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலத்திலிருந்து வானுலகத்தில் உள்ளோர்களுக்கு பகல் பொழுது ஆரம்பம் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தை அமாவாசை தினத்தில் தீர்த்தமாட எழுந்தருளிய ஶ்ரீராமர்

 இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீராமர் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தவாரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பக்தர்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

 தை அமாவாசை தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், பேருந்து, கார், வேன்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இவர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடற்கரை மற்றும் கோயில் வாயிலிலும் நகரின் முக்கியப் பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, நகரப் பேருந்துகள் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே நிறுத்தப்பட்டன. கார், வேன் போன்ற சுற்றுலா வாகனங்களும் மாற்றுப் பகுதிகளில் திருப்பிவிடப்பட்டன.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனிதத் தீர்த்தங்களான சேதுக்கரை, திருப்புல்லாணி, தேவிபட்டினம் கடல் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக சிறப்புப் பூஜைகள்செய்து, அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!