நாளை தனிக்கட்சி அறிவிப்பு; முதல்வரை வறுத்தெடுத்த தினகரன்

புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில், தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்து பொங்கலைக் கொண்டாடினார் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன்.


 

இன்று, சேலம் புறப்படுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி  காவேரி நதி நீர் ஆணையம் அமைத்து தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்.

காவேரி நீரை மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது. மழை நீரை சேமித்துவைத்திருப்பதாக ஆளுநர் உரையில் பொய் சொல்லி உள்ளது தமிழக அரசு. பயிர்கள் வாடிவரும் நிலையில், காவேரி நீரை தமிழகத்துக்கு மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். குருட்டு அதிர்ஷ்டத்தில் எடப்பாடி பழனிசாமி  முதல்வரானதால் காவேரி நீரை தமிழகத்துக்குப் பெற  மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க முடியும். 18 எம்.எல்.ஏ-க்கள்  தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வரும். இரட்டை இலை  தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க-வின் சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான  தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு  ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர்.

பணம் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டதாக, என் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், ஆர்.கே. நகர் மக்களை தாழ்த்திப் பேசி வருகின்றனர். இரட்டை இலை  சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன். தனிக்கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக, நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவுசெய்வோம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் டி.டி.வி. தினகரன் அணி வெற்றிபெறும். இந்த ஆட்சி, இரண்டு மாத காலத்தில் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!