வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (16/01/2018)

கடைசி தொடர்பு:11:41 (16/01/2018)

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!’ - வலியுறுத்தும் தமிழ் அமைப்புகள்

உலகப் பொதுமறையான திருக்குறளை, தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நெல்லையில், திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை

தமிழின் சிறப்புக்கு முக்கியக் காரணமாக விளங்கும் திருக்குறள் தந்த திருவள்ளுவரை நினைவேந்தும் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை டவுனில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதிகைக் கவிஞர் மன்றம், வாசுகி வளர் கல்வி மன்றம், தாமிரபரணி இலக்கிய மாமன்றம், பொருனை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் சார்பாக, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது. திருவள்ளுவர் பேரவை சார்பில், அந்த அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

பின்னர் பேசிய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ’’திருக்குறள் பொதுவான நூல், அனைவருக்கும் அன்பையும் சமத்துவத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும்  திருக்குறளை, மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருவள்ளுவர் தினத்தில் அனைத்து அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்றார்கள்.  

இதேபோல, அரசியல் கட்சியினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை சட்டமன்ற உறுப்பினரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். முன்னதாக, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ-வான ஏ.எல்.எஸ்.லட்சுமணம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 

மாலை அணிவித்து மரியாதை

நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக, சிறுபான்மைப் பிரிவு முன்னாள் மாவட்டச் செயலாளர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் குயிலி நாச்சியார், நம்பிராஜன், சுதா தர்மசீலன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு முன்னாள் மாநகரச் செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர்  துரைப்பாண்டியன் , கருப்பந்துறை சரவணன், கிதியோன் கிங் ஆகியோர் மாலை அணிவித்தனர்.