வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (16/01/2018)

கடைசி தொடர்பு:14:10 (16/01/2018)

அ.தி.மு.க-வுக்கு பச்சைக்கொடி; பிற கட்சிகளுக்கு 'செக்' வைத்த போலீஸ்!

புதுக்கோட்டை நகரில் உள்ள அண்ணா சிலை பகுதியில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தெருமுனைப் பிரசாரம் உள்ளிட்டவை நடத்தக் கூடாது என்று காவல்துறை போர்டு வைத்திருக்கிறது. இந்தத் தடை, 1.1.2018  முதல்  அமலுக்கு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பால், அ.தி.மு.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

புதுக்கோட்டை நகரின் மிக முக்கியமான இடமாகவும் உள்ளூர், வெளியூர் மக்கள் அதிக அளவில் தினமும் வந்துபோகும் இடமாகவும் அண்ணா சிலை அமைந்திருக்கும் பகுதி இருக்கிறது. நான்கு பிரதான வீதிகளை இணைக்கும் இடமாகவும், பெரிய இட வசதிகொண்ட இடமாகவும் இந்தப் பகுதி இருப்பதால், எல்லா கட்சிகளுமே இங்குதான் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் என்று  நடத்தும். இது தவிர, இங்குள்ள கீழவீதியில்தான் பெரிய மார்க்கெட் பகுதி இருக்கிறது. வெளியூர் மக்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்துபோவார்கள். ''இங்கு கூட்டம் போட்டால், அது உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல், பரவலாக வெளியூர் மக்களையும் சென்றடையும்'' என்று எல்லாக் கட்சிகளுமே நம்புகின்றன. அதனாலேயே, மக்களைச் சந்திக்கும் அனைத்து முன்னெடுப்புகளையும் இந்தப் பகுதியில் நடத்துவதற்கே ஆர்வம்காட்டிவந்தனர். மாதம் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் இந்தப் பகுதியில் நடக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், போலீஸ் திடீர் தடை விதித்து அறிவிப்பு போர்டு வைத்திருப்பது அனைத்துக் கட்சியினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

இந்தப் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக அதிகமான ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர், இரா.கணேசன். இவர் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். "ஒன்றாம் தேதியிலிருந்து தடை என்று போர்டு வைத்தாலும், அந்தப் பகுதியில் கூட்டம் போடுவதற்கு அறிவிக்கப்படாத தடையை போலீஸ் நடைமுறைப்படுத்திதான் வைத்திருந்தது. எங்கள் கட்சியின் சார்பில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுச்சென்றாலும் மறுத்துவிடுவார்கள். ஆனால், அ.தி.மு.க-வினருக்கு மட்டும் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக அனுமதிகொடுத்துவிடுவார்கள். அதை சுட்டிக்காட்டி, பெரிய மல்யுத்தமே செய்துதான் நாங்கள் அனுமதி வாங்குவோம். இப்போது அதற்கும் தடை என்றால், நாங்கள் எங்கு போவது. காவல்துறை இரண்டு இடங்களில் கட்சிகள் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. ஒன்று, ஆள் நடமாட்டமே இல்லாத சின்னப்பா பூங்கா. இன்னொன்று, கடுமையான போக்குவரத்து நெருக்கடி உள்ள திலகர் திடல்.

சின்னப்பா பூங்கா பகுதியில் பெரியகட்சிகளே கூட்டம் போட்டாலும் மக்கள்  வர மாட்டார்கள். திலகர் திடலின் உள்ளே பெரிய கட்சிகள் மட்டும்தாம் கூட்டம் போடமுடியும். காரணம், திடல் பெரிசு. சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குக்கூட அங்கு இடவசதி கிடையாது. அண்ணா சிலை பகுதி, எல்லாத் தகுதிகளுடன் இருந்தது. போலீஸ் போட்டிருக்கும் இந்தத் தடையை எதிர்த்து, மிக விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் அந்தப் பகுதியிலேயே நடத்தப்படும்" என்றார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். "அண்ணா சிலை பகுதியில் கட்சிகள் கூட்டம் போடுவதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தவிர, போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. கட்சிகள் காலங்காலமாக கூட்டம் நடத்திவரும் திலகர் திடல் பகுதியிலும், போக்குவரத்து பாதிப்பில்லாத பகுதியான சின்னப்பா பூங்கா பகுதியிலும் நாங்கள் தடை விதிக்கவில்லை. கட்சிகள் இந்த இரண்டு இடங்களிலும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்" என்றார்கள்.