வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (16/01/2018)

கடைசி தொடர்பு:18:09 (17/01/2018)

'இது என்னுடைய அரசியல் பிரவேசம்தான்!' - தினகரனுக்கு செக் வைக்கும் 'தலைவன் பாஸ்'

பாஸ்கரன்

ம்பத்தூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், நலத்திட்ட உதவிகளை வழங்கி அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார், தினகரனின் தம்பி பாஸ்கரன். ' தலைவன் பாஸ்' ரசிகர் மன்றம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., வேதாச்சலம் உள்பட பலரும் குழுமியுள்ளனர். அரசியலுக்கான முன்னோட்டம் போல விழாவை நடத்திக்கொண்டிருக்கிறார் பாஸ்கரன்' என்கின்றனர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 

டி.டி.வி.தினகரனின் உடன்பிறந்த சகோதரர், பாஸ்கரன். ஜெயா டி.வி நிர்வாகியாக சில காலம் வலம்வந்தவர், பின்னாளில், 'தலைவன் பாஸ் ரசிகர் மன்றம்' என்ற பெயரில் அமைப்பை நடத்திவந்தார். இந்நிலையில், இன்று காலை அம்பத்தூர் நகரம் முழுக்க பாஸ்கரனின் ஆளுயர போஸ்டர்கள் களைகட்டியுள்ளன. 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் ஏழைத் தொண்டர்களின் தலைவன்' என்ற பெயரில் புதிதாக போஸ்டர்கள் முளைத்திருந்தன.

பாஸ்கரன்

சுமார் இரண்டாயிரம் பேர் கூடிய இந்தக் கூட்டத்துக்கு, அ.தி.மு.க தொண்டர்கள், பாஸ் மன்ற நிர்வாகிகள் எனப் பலரும் கூடியிருந்தனர். மிக்ஸி, வெட் கிரைண்டர் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ' இப்படியொரு கூட்டம் கூடும் என பாஸ் (பாஸ்கரன்) நினைத்துப் பார்க்கவில்லை. 'வந்தவர்கள் யாரும் வெறும் வயிற்றுடன் போகக்கூடாது' என இரண்டாயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி தயார்செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இனி, மாவட்டம்தோறும் இதுபோன்ற கூட்டங்கள் நடக்கும். அ.தி.மு.க-வை மீட்பதுதான் பாஸ்கரனின் முதல் பணி' என்கின்றனர் மன்ற நிர்வாகிகள். 

பாஸ்கரன்

கூட்டத்தில் பேசிய பாஸ்கரன், ' இது என்னுடைய அரசியல் பிரவேசம்தான். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. மன்றத்தையே கட்சியாக மாற்றி செயல்படப்போகிறேன். என்னுடைய வழி எப்போதுமே எம்.ஜி.ஆர் காட்டிய வழிதான். அவர் காட்டிய வழியில் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்செய்ய இருக்கிறேன். இப்போது, தொண்டர்கள் அனைவரும் பிரிந்துகிடக்கிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தினகரன், அவருடைய கொள்கையில் தனித்து செயல்படுகிறார். நான் எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் பயணிக்கிறேன்' எனக் கூடியிருந்த கூட்டத்தை நெகிழவைத்தார்.