'தினகரனின் தனிக்கட்சி, சின்னம் பற்றி எதுவுமே தெரியாது!' - தடதடக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் #VikatanExclusive

தினகரன்

ள்ளாட்சித் தேர்தலுக்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' தனிக்கட்சியின் பெயர், கொடி போன்ற விவரங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அ.தி.மு.கவில் இருக்கிறோம். தோழமைக் கட்சியாக அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம்' என்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். 

புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த தினகரன், இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ' எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும். இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் வரவுள்ளன. அ.தி.மு.கவின் ஒன்றரை கோடித் தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் உள்ளனர். இத்தனை தொண்டர்களும் பேரவை இல்லாமல் செயல்பட முடியாது. இதுதொடர்பாக, நான் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் பேசிவிட்டு வந்தேன். அவரும், ' உன் மனதுக்குச் சரியென்று படுவதைச் செய்' எனக் கூறிவிட்டார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த இருக்கிறேன்' என்றார். டி.டி.வி.தினகரனின் இந்தப் பேச்சு, மன்னார்குடி குடும்பங்களுக்குள் புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி விவரித்த குடும்ப உறவினர் ஒருவர், 

"பெங்களூரு சிறையில் கடந்த வாரம் சசிகலாவை சந்தித்துப் பேசினார் தினகரன். இந்தச் சந்திப்புக்கு வெற்றிவேலையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். வீடியோ விவகாரத்தில் சசிகலாவை சமாதானப்படுத்துவதன் அவரது நோக்கமாக இருந்தது. தனிக்கட்சி தொடங்குவதைப் பற்றிய விவாதம் எதுவும் இடம் பெறவில்லை. சொல்லப் போனால், அவருடைய முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் எதிராக உள்ளனர். காரணம், இத்தனை ஆண்டுகாலம் இரட்டை இலையை அடிப்படையாக வைத்துத்தான் மன்னார்குடி உறவுகள் செயல்பட்டு வந்தன. முன்பு திருச்சி கூட்டத்தில் தினகரன் பேசும்போதும், ' இரட்டை இலை கிடைக்காவிட்டால், தொப்பி சின்னத்திலாவது போட்டியிட்டு வெற்றி பெறுவேன்' எனப் பேசினார். இதனை குடும்ப உறவுகள் யாரும் ரசிக்கவில்லை. காரணம், ' அ.தி.மு.கவின் அடித்தளமே இரட்டை இலைதான். அதுவே வேண்டாம் என்றால், இவர் என்ன மனநிலையில் இருக்கிறார்' என்ற கேள்வியைத்தான் பலரும் கேட்டனர். தனிக்கட்சி தொடங்கிவிட்டால், நீதிமன்றத்தில் இரட்டை இலைக்கு தினகரனால் உரிமை கோர முடியாது. எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிதான் பலம் பெறும். ஆனால், தினகரன் மனநிலை வேறுமாதிரியாக இருக்கிறது. ' தனக்காகத்தான் கூட்டம் கூடுகிறது. ஆட்சி மாற்றத்தையே உருவாக்க முடியும்' என நினைக்கிறார். ஆர்.கே.நகர் வெற்றி அவரது மனதை மாற்றிவிட்டது" என்றார் விரிவாக. 

'பேரவை இல்லாமல் இயங்க முடியாது' என தினகரன் கூறியிருப்பது குறித்து, அவரது தீவிர ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

தினகரனின் தனிக்கட்சி முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

" (ஹா ஹா ஹா) நாங்கள் அ.தி.மு.கதான். இந்தக் கருத்தில் எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை. அவர் தனிக்கட்சி தொடங்குவதன் நோக்கம் இதுதான். இரட்டை இலை மற்றும் அ.தி.மு.க கட்சி தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் வழக்கைத் தொடுத்துள்ளனர். அது ஒரு சிவில் வழக்கு. இந்த வழக்கு முடிவுக்கு வர ஒரு வருடம் ஆகலாம். இரண்டு வருடம் ஆகலாம். ஐந்து வருடம்கூட ஆகலாம். அவ்வளவு எளிதில் மீட்டெடுத்துவிட முடியாது. இரட்டை இலையும் அ.தி.மு.கவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் சமாதானப் பேச்சுக்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி சமாதானம் ஆகாதபட்சத்தில், தேர்தலை எதிர்கொள்ள சின்னம் முக்கியம். உடனே, அ.தி.மு.க வில் விலகிச் செயல்படுகிறார்கள் என்பது அர்த்தமல்ல. உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சி தொடங்கி, மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். 'உள்ளாட்சியில் பெரும் வெற்றி பெற்றால், இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற இதை ஒரு காரணமாக முன்வைக்கலாம்' என அவர்கள் கருதலாம்".  

இதற்கு சசிகலாவின் ஆதரவு இருக்கிறதா? 

" அவர் எந்தவொரு செயலைச் செய்தாலும் சின்னம்மாவின் அனுமதியோடுதான் செய்வார்". 

தனிக்கட்சியில் இணைந்து செயல்படுவீர்களா? 

"கட்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சி, சின்னம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அவருடைய முயற்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம். அந்தக் கட்சியில் நாங்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும்? நாங்கள் எப்போதும் அ.தி.மு.கதான். தோழமைக் கட்சியாக எங்களை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்". 

இது கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி பேசுவது போலவே இருக்கிறதே? 

"எங்களுக்கு பொதுச் செயலாளர் சின்னம்மாதான். அவர் இப்போதும் அ.தி.மு.கவில்தான் இருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர்தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாகச் சொல்கிறார். சின்னம்மா தனிக்கட்சி தொடங்கவில்லையே?!" 

ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றிக்காகப் பாடுபட்டீர்கள்? உள்ளாட்சி வெற்றிக்கும் களமிறங்குவீர்களா? 

"அவர் தனிக்கட்சி தொடங்குவதே எங்களுக்கு இதுவரையில் தெரியாது. முதலில் அவர் கட்சியைத் தொடங்கட்டும். அதன்பிறகு தேர்தலில் உழைப்பதா...வேண்டாமா என்பதைப் பற்றி பிறகு சொல்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் வந்தால், தனிச் சின்னம் வேண்டும். அதற்காகத்தான் அவர் தனிக்கட்சி பாதையில் போகிறார். மக்கள் ஆதரவு இருப்பதால் நிச்சயம் ஜெயிப்பார். அதன்பிறகு இரட்டை இலையை மீட்பார். சுயநலத்துக்காக அவர் கட்சியைத் தொடங்கவில்லை. பொதுவான சின்னம் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார். கட்சியை அறிவிக்கட்டும். பிறகு பார்க்கலாம்".
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!