யானைக் கூட்டத்துடன் வந்த குட்டியானை கிணற்றில் விழுந்தது! 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு | Elephant rescued after 10 hours struggle

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (16/01/2018)

கடைசி தொடர்பு:15:25 (16/01/2018)

யானைக் கூட்டத்துடன் வந்த குட்டியானை கிணற்றில் விழுந்தது! 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

கிணற்றில் தவறிவிழுந்த குட்டியானை, கிராம மக்கள் உதவியுடன் 10 மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டது. பின்னர், யானைக் கூட்டத்தில் குட்டியானை சேர்க்கப்பட்டதும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

கிணற்றில் விழுந்த குட்டி யானை

கர்நாடகாவிலிருந்து இடபெயர்ந்த யானைக் கூட்டம், கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மூன்று குழுவாகப் பிரிந்து சுற்றிவருகின்றன. ஜனவரி 15-ம் தேதி இரவு, ராயக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாவாடரைபட்டி கிராமத்தை 20-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் கடந்து சென்றபோது, பாக்யா என்பவரின் நிலத்தில் 20 அடி ஆழம் உள்ள கிணற்றில், பிறந்து மூன்று மாதங்களே ஆன பெண் யானைக்குட்டி தவறி  விழுந்தது. இன்று காலை யானைக் கூட்டம் பயிர்களைச் சேதம் செய்துள்ளதைப் பார்வையிட்ட கிராம மக்கள், யானைகள் கடந்துசென்ற பாதையைக் கண்காணித்துள்ளனர். அப்போது, பாக்யாவின் கிணற்றில் தவறிவிழுந்த குட்டியானை, வெளியேற முடியாமல் அங்கும் இங்குமாக சுற்றிச்சுற்றி வந்துள்ளது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் குட்டியானை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. 

குட்டி யானை

கிணற்றில் விழுந்த குட்டியானைகுறித்து வனத்துறைக்கும், தீயாணைப்புத்துறைக்கும் கிராம மக்கள் தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அவர்கள், வலையைப் பயன்படுத்தி குட்டியானையை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். மீட்புப் பணியின்போது, குட்டியானைமீது மனிதர்களின் கைபட்டால் யானைக் கூட்டம் சேர்த்துக்கொள்ளாது என்பதால், அதன் உடல் முழுவதும் சேற்றைப் பூசிவிட்டு, அருகே இருந்த வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், யானைக் கூட்டத்தில் குட்டியானை சேர்க்கப்பட்டது. அந்த குட்டியானையை யானைக் கூட்டம் சேர்த்துக்கொண்டதா? என்பதைக் கண்காணிக்க, இரண்டு வனக்காவலர்கள் கவனித்துவருகின்றனர்.