தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிறு வீட்டுப் பொங்கல்! - அசத்திய குழந்தைகள் | Children celebrated pongal in southern districts

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (16/01/2018)

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிறு வீட்டுப் பொங்கல்! - அசத்திய குழந்தைகள்

குழந்தைகள் பொங்கல்

தென் மாவட்டங்களில், பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, குழந்தைகள் பொங்கல் கொண்டாட்டமான சிறு வீட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள், தாங்களே சிறிய வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி, சிறிய பாத்திரத்தில் பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் சிறுவர், சிறுமியர் சேர்ந்து கொண்டாடும் சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பிரசித்தம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைப்பார்கள். சிறுமிகள், சிறுவர்கள் இணைந்து அந்த வீட்டில் படையலிட்டு சாமி கும்பிட்டு, சாப்பிட்டு மகிழ்வார்கள்.

சிறுவீட்டு பொங்கல்

சிறு வீட்டுப் பொங்கல், இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது. குமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் சபரீஷ்குமார் என்ற சிறுவனின் தலைமையில் அஷ்டல், ராகுல், கார்த்திகேயன், அன்சியா, தர்ஷினி, அரவிந்த், சக்திமீரா, கனிஷ்கா, தட்சனா, விஷ்ணு, கார்த்திகா ஆகிய குட்டீஸ் அனைவரும் சேர்ந்து சிறு வீட்டுப் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகளில் சிலர், வேட்டி சட்டையும், பாவாடை தாவணியுமாக பாரம்பர்ய உடையில் இருந்தனர். அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடிய இந்தப் பொங்கல், வித்தியாசமானதாக அமைந்திருந்தது. 

சிறு வீட்டுப் பொங்கல்குறித்து சபரீஷ்குமாரின் தந்தை திசை.கே.வி.என்.நரசிங்க மூர்த்தி கூறுகையில், ’முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் வரக்கூடிய சிறு வீட்டுப் பொங்கல்தான் குழந்தைகளை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும். இப்போது, அந்தக் கலாசாரம் சற்று மறைந்துவருகிறதோ என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது. இந்த நிலையில், எனது மகன் சபரீஷ்குமார் தலைமையில் குட்டீஸ் அனைவரும் சேர்ந்து சிறு வீட்டுப் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடியது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றவர், சிறு வீட்டுப் பொங்கல் பற்றி விளக்கினார்.  

உற்சாகக் கொண்டாட்டம்

’’மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் கோலமிட்டு, சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் பூசணிப் பூவை வைப்பது வழக்கம். பின்னர், அந்த சாணத்தையும் பூவையும் எடுத்துவிட்டு, அதைத் தட்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள். நாள்தோறும் வைக்கப்படும் பிள்ளையாரும் பூவும் எருவாக்கி சேமித்துவைக்கப்பட்டு, பொங்கலுக்குப் பின்னர் அதை எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்காக சிறு வீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். 

சிறு வீட்டுப் பொங்கல் வைத்ததும், சேர்த்துவைக்கப்பட்ட எருவை குழந்தைகளுடன் உற்சாகமாக நீர் நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைத்துவிட்டு ,அந்த நாள்  முழுவதும் பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்தப் பண்டிகை மறைந்துவரும் நிலையில், குழந்தைகள் அவர்களாகவே ஒரு சேலையை எடுத்து வீடு போல கட்டி, அதன் முன் பொங்கலிட்டு உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தது பாராட்டுக்குரியது’’ என்றார் உற்சாகத்துடன்.