கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம் | "Dont go to temple; dont worship gods' - An emotional letter from a mother!

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (19/01/2018)

கடைசி தொடர்பு:11:40 (19/01/2018)

கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்

தீண்டாமை ஒரு பாவச்செயல்', 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்', 'தீண்டாமை மனிததன்மையற்ற செயல்' எனக் குழந்தைப் பருவத்தில், ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா, ஆறடி பெரியவர்களா வளர்ந்த பிறகும் தீண்டாமையைப் பார்த்துட்டே இருக்கோம். 'கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே' அப்படிங்கிற ஸோ கால்டு விஷயத்தைப் பத்தி பேசப் போறேன்னு நினைக்கிறீங்களா?

சாதி, மதம், பணம் இதன் மூலமா கட்டப்படற தீண்டாமையைப் பற்றி இங்கே சொல்ல வரலை. அதைவிட கொடுமையானதைப் பற்றி சொல்றேன். கூடப் பிறந்தவங்க, சொந்தக்காரங்க, சில சமயத்தில் பெத்தவங்களேகூட இந்தத் தீண்டாமையைக் கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியே இல்லாம நடத்தும் கொடுமையைப் பற்றிதான் சொல்லப்போறேன். அது என்ன தீண்டாமைனு கேட்கறீங்களா? ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துதுன்னு கொஞ்சம் உற்றுப் பாருங்க. என் வார்த்தைகளில் இருக்கிற வலியும் வேதனையும் புரியும். 

ஆட்டிஸம்

ஒரு குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதுமே என்ன நடக்குது? அந்தப் பாவப்பட்ட குழந்தையைப் பெத்தவங்களை பெரியவங்களும், கூடப்பிறந்தவங்களுமே வேற வீடு பார்த்துக்கச் சொல்லிடுவாங்க. ஏன்னா, அந்த வீட்ல இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் ஆட்டிஸம் வந்துருமாம். 

வெட்டிங் இன்விடேஷன் கொடுக்க உங்க வீட்டுக்கு வர்றவங்க, உங்களை கல்யாணத்துக்கு அவசியம் வரணும்னுதானே சொல்வாங்க. ஆனா, எங்க வீட்டுக்கு இன்விடேஷனோடு வர்றவங்க என்னை எப்படி இன்வைட் பண்ணுவாங்க தெரியுமா? 'இந்தப் பிள்ளையை வெச்சுக்கிட்டு நீ ஏன் வந்து கஷ்டப்படணும்? நீ வரலைன்னாலும் தப்பா நினைச்சுக்க மாட்டோம்'னு பாலிஸ்டா சொல்லிடுவாங்க. 

கடிதம்

ஸ்கூலுக்குப் போனாலாவது நம்ம பிள்ளை, எல்லார்கிட்டேயும் கலந்து பழகும். அதனால், ஒரு முன்னேற்றம் கிடைக்கலாம்னு ஆசையோடு போவோம். 'அச்சச்சோ... எங்களால் இந்த மாதிரி பிள்ளையைப் பார்த்துக்க முடியாது. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்கோங்க'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிடுவாங்க. இதைத் தனியா சொன்னாலும் பரவாயில்லைங்க. ஏதோ நானும் என் குழந்தையும் பிளான் பண்ணி செஞ்ச தப்பை கையும் களவுமா பிடிச்ச மாதிரி, அத்தனை பேரன்ட்ஸ் முன்னாடியும் சத்தமா சொல்வாங்க. மனசும் உடம்பும் அப்படியே குறுகிப்போயிடும். மற்ற பேரன்ட்ஸை, அவங்க குழந்தைகளின் பெயரோடு இணைச்சு, 'நிகில் மம்மி', 'அம்ரிதா டாடி'னு சொல்வாங்க. ஆனா, எங்களுக்கு என்ன அடையாளம் தெரியுமா? 'அந்த மென்டலின் மம்மி'. ஏங்க, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பெயரே கிடையாதா? 

லெட்டர்

மற்ற குழந்தைகள் மாதிரியே எங்க குழந்தையையும் ஹோட்டல், காப்பி ஷாப், தியேட்டர்னு கூட்டிட்டுப் போக நிறைய ஆசை இருக்குங்க. அப்படி கூப்புட்டுட்டுப் போனால், எல்லோரின் குறுகுறு பார்வையும் எங்களை அந்த இடத்தில் ஒரு நிமிஷம் நிம்மதியா இருக்கவிடறதில்லை. கோயிலில்லகூட, 'இந்த மாதிரி பிள்ளைகளை எதுக்கு வெளியில் அழைச்சுட்டு வரணும். உங்களுக்கும் கஷ்டம்; மற்றவங்களுக்கும் தொந்தரவு'னு ஈவு இரக்கமே இல்லாம கேட்கறாங்களே... 

என் பிள்ளைக்கு, உங்க பிள்ளைகள் மாதிரி, 'அம்மா பசிக்குது; அம்மா கால் வலிக்குது; அம்மா ஐஸ்கிரீம் வாங்கிக் குடு; அம்மா ஐ லவ் யூ'னு கொஞ்சவோ, கெஞ்சவோ தெரியாது. வளர்ந்த சில பிள்ளைகளுக்குத் தெரிய வரும் எந்த கெட்ட விசயமும் என் பிள்ளைக்கு வாழ்க்கையின் கடைசி நாள் வரைக்கும் தெரியப்போறதில்லை. ஆனா, அந்தக் கடைசி நாள் வரை என் பிள்ளையுடன் என்னால் இருக்கமுடியாதே. இந்த பயம்தான் தினம் தினம் என்னைக் கொன்னுட்டே இருக்கு.

கிட்ஸ்

என் மரணத்துக்கு அப்புறம், என் பிள்ளையின் பசிக்கு யாரு சாப்பாடு போடுவாங்க? தினம் தினம் இந்தக் கேள்வியோடுதான் பிள்ளைக்குச் சோறு ஊட்டுறேன். நான் உயிரோடு இருக்கிற வரை என் பிள்ளையைப் பத்திரமா பார்த்துப்பேன். எனக்கு அப்புறம் அவன்/ அவள் நிலைமை? எங்களைத்தான் சொந்தங்கள் ஆரம்பிச்சு இந்தச் சமுதாயம் வரை தீண்டத்தகாதவங்களா ஒதுக்கி வெச்சிருக்கே. 

மாடு, மரம், மனுஷன், சாதி, மதம், கடவுள் என எல்லாத்துக்காகவும் எல்லாருக்காகவும் போராடறீங்க. ஆட்டிஸம் பிள்ளைகளுக்கு இந்தச் சமுதாயத்தில் குறைந்தபட்ச அன்பு கொடுக்கணும்னு எப்போ உணர்ந்து போராடப்போறீங்க மக்களே? 

இப்படிக்கு, 

பாதிக்கப்பட்ட தாய்


டிரெண்டிங் @ விகடன்