பென்னி குயிக் கல்லறையைப் பாதுகாக்க ஒரு பொங்கல் விழா!

பெரும்பாலான தென்மாவட்டங்களில், குறிப்பாக தேனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி, பென்னிகுயிக் என்று பெயர் வைக்கப்படும். அதுபோல, அந்த ஊர்களில் சுபகாரியங்களுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களில், கடவுள் படங்களுக்குப் பதில் பென்னிகுயிக் படம் இடம்பெறும். அந்தளவுக்கு அந்த மாவட்ட மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் அந்தப் பென்னிகுயிக், முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் கட்டியவர். அந்த அணையால்தான், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகின்றன. நீடித்த வறட்சி, கொடுமையான பஞ்சம், வானம் பார்த்த பூமி என்று இருந்த தென் மாவட்டங்களை முப்போகம் விளையும் நிலங்களாக மாற்றியதில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பெரும்பங்கு இருக்கிறது. அந்த அணையை அமைத்ததில் பென்னிகுயிக்கிற்கு அதைவிட அபரிமிதமான பங்கு இருக்கிறது. பென்னிகுவிக் மறைந்து 107 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய கல்லறை இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்து தேவாலயச் சட்டத்தின்படி, நூறு வருடங்களுக்கு மேல் ஒரு கல்லறை இருப்பின் அதனை அகற்ற வேண்டும் என்பது விதி!

இங்கிலாந்தில் உள்ள பென்னி குயிக் கல்லறை:

இங்கிலாந்து தேவாலயச் சட்டத்தின்படி, பென்னிகுயிக்கின் கல்லறையையும் இடிக்கும் நிலை வந்தது. அதையடுத்து, பென்னிகுயிக்கின் வாரிசுகள் சோகத்தில் இருந்தனர். அந்தநேரத்தில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தான பீரோலி என்ற இளைஞர் இங்கிலாந்து சென்றிருந்தார். அவருக்கும் இந்தத் தகவல் தெரியவந்தது. உடனடியாக அவர், இங்கிலாந்து அரசிடம், ‘பென்னிகுவிக் என்பவர் தென் தமிழகத்தில் போற்றத்தக்க ஒருவர். அவரது கல்லறையை இடிக்கக் கூடாது’ என்று முறையிட்டார். அதைக் கேட்டுக்கொண்ட இங்கிலாந்து அரசு, தேவாலய நிர்வாகிகள் கொண்ட ஒரு குழுவை தமிழகம் அனுப்பியது. அவர்கள் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்டு, தென் மாவட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவது என்பது திட்டம். இந்தக் குழுவில், பென்னி குயிக்கின் பேத்தி சூசன் ஃபெரோவும் இடம்பெற்றுள்ளார். நேற்று மதுரை விமான நிலையம் வந்தடைந்த குழுவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு வரவேற்புக் கொடுத்து வாழ்த்தினார். அவருடன் தேனி மாவட்ட எம்.பி பார்த்திபன் உடன் இருந்தார். தொடர்ந்து தேனி வந்தடைந்த அக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடுகிறார்கள்.

நேற்று பென்னி குயிக் பிறந்தநாள்:

வருடந்தோறும் ஜனவரி 15-ம் நாள் பென்னிகுயிக் பிறந்தநாள். இதனை தேனி மாவட்ட மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்தமுறை அவர்களுடன் இணைந்து, பென்னிகுயிக் பேத்தி மற்றும் தேவாலய நிர்வாகக் குழுவினரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 2004-ம் ஆண்டு பென்னிகுவிக்கின் பேரன் இதே போன்று தமிழகம் வந்து, முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்டு தேனி மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

தேவாலய நிர்வாகிகள் குழு ஆய்வு செய்த பின்னர், அந்தக் குழு தனது அறிக்கையை இங்கிலாந்து அரசிடமும், தேவாலய நிர்வாகத்திடமும் சமர்ப்பிக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பென்னி குயிக்கின் கல்லறை பாதுகாக்கப்பட்ட கல்லறையாக அறிவிக்கப்படும். தென் மாவட்ட மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் பென்னி குயிக்கின் நினைவுகளைப்போல அவரது கல்லறையும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே தென் தமிழகத்தின் ஆவல்... எதிர்பார்ப்பு. இங்கிலாந்து அரசாங்கம் அதை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!