'ஒவ்வொரு வருடமும் இந்தக் குறை இருக்கிறது'- சித்தன்னவாசலில் குவிந்த மக்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள், காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக சித்தன்னவாசலில் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியே கொண்டாட்டங்களாலும் உற்சாகத்தாலும் நிறைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில், காணும் பொங்கலைக் கொண்டாட குடும்பமாகவும், நண்பர்கள் குழுக்களாகவும் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை வந்திருந்தனர். பலரும் வீட்டில் சமைத்த உணவு, கடையில் வாங்கிய இனிப்பு, கார வகைகளுடன் வந்திருந்தனர். மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, அறிமுகமில்லாத மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, இன்று காலை முதல் மாலை வரை அங்கேயே பொழுதைக் கழித்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலாத் தளத்தைப் பார்க்க வந்த மக்கள், இங்குள்ள குகை ஓவியம், மலைமீது அமைந்துள்ள சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றைப் பார்த்து, அவர்களே கைடாக இருந்து தங்களது பிள்ளைகளுக்கு அவற்றைப் பற்றி விவரித்தனர். மேலும், அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை, அவர்களின் பெற்றோர்கள் செல்போன் கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடினர். இதுதவிர, அங்குள்ள படகுக் குழாமில் குடும்பத்துடன் படகு சவாரிசெய்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.  புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சித்தன்னவாசல், மக்கள் கூட்டத்தால் திணறியது. ஆகையால், சிரமங்களும் சில அத்தியாவசியக் குறைபாடுகளும் காணப்பட்டன.

அதுகுறித்து பயணிகள் பேசும்போது, "ஓய்வாக அமர்வதற்கும்  உணவை உண்பதற்கும் இங்கு வசதிகள் இல்லை. பாறைகளில் அமர்ந்து சாப்பிட முடியாது. மர நிழல்களின் கீழ் உட்காரலாம் என்றால், சுத்தமில்லாமல் இருக்கிறது. எனவே, நிழற்குடைகள் போன்ற வசதிகள் செய்து தர வேண்டும். ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மாவட்டம் முழுவதிலுமிருந்து  மக்கள் வருவார்கள் என்பது மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியும். ஆனாலும், மெயின் ரோட்டிலிருந்து உள்ளே வருவதற்குப் போதிய பேருந்து வசதி செய்யப்படவில்லை. இந்தக் குறை, ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. அதை அவசியம் நீக்க வேண்டும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!