ஒரே நாளில் 42,508 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி! சாதனை படைத்த தூத்துக்குடி என்.டி.பி.எல்.

தூத்துக்குடி என்.டி.பி.எல் நிறுவனம், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 42 ஆயிரத்து 508 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது என என்.டி.பி.எல் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி பிரபாகர் தெரிவித்துள்ளார்.  

Ntpl power thermal thoothukudi

தூத்துக்குடியில், மத்திய அரசின் என்.எல்.சி இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.டி.பி.எல் நிறுவனம்மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் மின் உற்பத்திக்காக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு நிலக்கரி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து என்.டி.பி.எல் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. 

ஒடிசா மாநிலத்திலிருந்து 'பங்கியா' என்ற கப்பல்மூலம் 42,508 மெட்ரிக் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டிருந்தது. உடனடியாக இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படவேண்டிய சூழல் ஏற்பட்டதால், கடந்த 14-ம் தேதி பொங்கல் தினத்தன்று, துறைமுகத்தின் வடக்கு தளத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. பொங்கல் தினத்தன்று பணியில் இருந்த குறைவான ஊழியர்களைக்கொண்டு 24 மணி நேரத்தில் 42,508 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து, என்.டி.பி.எல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக அதிகபட்சம் ஒரே நாளில் 36,610 மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இறக்குமதியைவிட 5,898 மெட்ரிக் டன் நிலக்கரி கூடுதலாக இறக்குமதிசெய்து புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வரலாற்றில், என்.டி.பி.எல் நிறுவனத்தின் 42,508 மெட்ரிக் டன் நிலக்கரி ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டது முதல் முறையாகும். பொங்கல் திருநாள் அன்று பணிக்கு வந்த குறைவான ஊழியர்களைக்கொண்டு ஒரே நாளில் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது. இச்சாதனை நிகழ்த்திய கோல் டிவிஷன் அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு முதன்மை நிர்வாக அதிகாரி பிரபாகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!