சாலையோரப் புதரில் மான்குட்டியை சுற்றிவளைத்த நாய்கள்! மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள் | Youths saved the deer from street dogs and handed over to forest department

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/01/2018)

கடைசி தொடர்பு:07:48 (17/01/2018)

சாலையோரப் புதரில் மான்குட்டியை சுற்றிவளைத்த நாய்கள்! மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

 

மான் குட்டி

 திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது, சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானல். அடர்ந்த வனப்பகுதி நிறைந்த கொடைக்கானலில் மான்கள், செந்நாய், சிறுத்தை, காட்டெருமை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்துவருகின்றன. இந்நிலையில், வனங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த பிறகு, போதுமான வாழிடம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வருவது வாடிக்கையாகிவருகிறது. ஒரு காலத்தில் காட்டெருமையைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் தற்போது  அவை, வீடுகளில் பழைய சோற்றையும், சினிமா போஸ்டரையும் தின்றுகொண்டிருப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். காட்டுயிர் தனது உணவாக போஸ்டரையும், பழைய சோற்றையும் உண்பதென்பது, மனிதன் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சூனியத்திற்கான குறியீடு. கொடைக்கானல் மலையில் அதிக அளவு செல்லும் வாகனங்கள், அதன் சத்தத்தால் விலங்குகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, பாதை மாறி வந்து, சாலையில் வாகனத்தில் மோதி இறப்பதும் அதிகரித்துவருகிறது.

மான் குட்டி

 இந்நிலையில், இன்று மதியம் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், நாயிடமிருந்து சாம்பார் மான் குட்டியைக் காப்பாற்றியுள்ளார்கள். மதுரையைச் சேர்ந்த ஜெய்சரவணன், சுதாகர் செல்வராஜ் இருவரும் நண்பர்கள். கொடைக்கானலில் இயங்கிவரும் ‘எக்கோ ஃப்ரெண்ட்லி என்வெரான்மென்ட் கன்சர்வேஷன் டிரஸ்ட்’ என்ற அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த அமைப்பின் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் வந்துகொண்டி ருந்திருக்கிறார்கள். வாழைகிரி என்ற இடத்துக்கு அருகே வரும்போது, சாலையோரம் உள்ள புதரில் மான்குட்டி ஒன்றை சில நாய்கள் சூழ்ந்து கடித்துக்கொண்டிருக்க, சத்தம் கேட்டு அந்த இடத்துக்கு ஓடிய நண்பர்கள், நாய்களை விரட்டிவிட்டு, மான்குட்டியை காப்பாற்றியிருக்கிறார்கள். சாம்பார் மான் வகையைச் சேர்ந்த அந்த மான்குட்டி, மூன்று மாதம் வயதுடையது. உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததுடன், பெருமாள்மலை செக்போஸ்ட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மான்குட்டியை ஒப்படைத்தார்கள். உடனடியாக மானுக்கு முதலுதவிசெய்த வனத்துறையினர், மான்குட்டியைக் கைப்பற்றி வனத்தில் விட்டனர். மான் குட்டியைக் காப்பாற்றிய இளைஞர்களை வனத்துறையினரும் பொதுமக்களும் பாராட்டினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க