தூத்துக்குடியில் காணும் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்

தூத்துக்குடியில் காணும் பொங்கலைக் கொண்டாடும் விதமாக மாட்டுவண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன.

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் உழவர் திருநாள், காணும் பொங்கல் தினங்களில் தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜல்லிக்கட்டு நடப்பது போல, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் காணும் பொங்கலுக்கு மாட்டுவண்டி பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. 

மாடுகளின் தரம் மற்றும் அதன் வயதிற்கேற்ப சின்ன மாட்டுவண்டி பந்தயம், பெரிய மாட்டுவண்டி பந்தயம் என இருபிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக மாட்டுவண்டி பந்தயங்கள் சிறப்பாக நடைபெற்றன. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள செக்காரக்குடியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தையத்தில், 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. மாடுகளின் கொம்புகளில் சந்தனம் பூசப்பட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து, கொம்புகளில் எலுமிச்சைப் பழமும் குத்தி வைக்கப்பட்டன. கற்பூரம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின.

பெரிய மாட்டுவண்டிகளுக்கு, 15 கி.மீ., தூரமும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு, 11 கி.மீ., தூரமும் பந்தைய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. நெல்லை, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து போட்டிகளில் பலர் கலந்துகொண்டனர். இதில் சிறிய மாட்டுவண்டி பிரிவில், நெல்லை, பாளையைச் சேர்ந்த டி.எஸ்.பி வெங்கடேஷ் என்பவரின் மாட்டு வண்டி முதல் இடத்தை பிடித்தது. பெரிய மாட்டுவண்டி பிரிவில், நெல்லை மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவரின் மாட்டுவண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. இக்கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பந்தயம் என்பதால், பந்தயத்தைக் காண பக்கத்து கிராமங்களில் இருந்தும் சாலையின் இரு புறங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் நின்று ரசித்தனர். 

இதே போல், விளாத்திகுளம் அருகில் சூரங்குடியில் 41வது மாட்டுவண்டி பந்தயம்  நடைபெற்றது. இதில்,  பூஞ்சிட்டு, சின்னமாட்டு வண்டி, பெரிய மாட்டுவண்டி என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற , 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள்  கலந்து கொண்டன.  பெரிய மாட்டு வண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், சின்ன மாட்டு வண்டிகளுக்கு, 6 கி.மீ., தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு,5 கி.மீ தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. 

 இப்போட்டியில், பெரிய மாட்டுவண்டி பிரிவில், சங்கரபேரியைச் சேர்ந்த, ஆறுமுகப்பாண்டியனின் வண்டியும், சின்னமாட்டுப் பிரிவில், கடம்பூரைச் சேர்ந்த, எஸ்.வி.எஸ்.பி. ராஜாவின் வண்டியும் முதல் பரிசுகளைத் தட்டிச்சென்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!