வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/01/2018)

கடைசி தொடர்பு:21:30 (16/01/2018)

பொங்கல் விழாவில் தகராறு... போலீஸைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்!

நெல்லையை அடுத்த தென்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய மக்களை அவதூறாகப் பேசிய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரைத் தட்டிக்கேட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகில் உள்ள தென்கலம் கிராமத்தில் 15-ம் தேதி பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக காவல்துறையினரிடம் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்டதால், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விளையாட்டு விழா நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இரவு 10 மணியாகியும் விழா முடிவடையவில்லை. 

அதனால் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் விழாவை முடிக்குமாறு வலியுறுத்தினர். அப்போது கிராம மக்கள், ‘பரிசளிப்பு விழா மட்டுமே இருப்பதால் மைக் செட்டை அணைத்து விட்டு அதனையும் நடத்தி முடித்து விடுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு போலீஸார் சம்மதிக்கவில்லை. ஆகவே, பரிசளிப்பு விழாவை மறுநாள் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டு மக்கள் கலைந்து சென்றுள்ளனர். 

அப்போது அங்கிருந்த விளக்குகளை அணைக்குமாறு தெரிவித்த போலீஸார், கிராமத்தின் நடுவில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கான விளக்கையும் அணைக்க வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த விளக்கு தினமும் எரியும் என்பதால், அதனை அணைக்க வேண்டாம் என பொதுமக்கள் தெரிவித்ததை காதில் வாங்கிக் கொள்ளாத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஆனந்தகுமார், சிலைக்கான விளக்கை அணைக்க வற்புறுத்தியதுடன் பொதுமக்களை சாதிப்பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.

இதனை கிராம மக்கள் தட்டிக் கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீது கிராம மக்கள் கல் எறிந்து தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். அதனால் காவல்துறையினர் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டதுடன், முத்துக்கிருஷ்ணன், சுரேஷ் என்ற இளைஞர்கள் இருவரை பிடித்துச் சென்றனர். இதனை தடுக்க முயற்சி செய்த பெண்களையும், இளைஞர்களையும் தாழையூத்து டி.,எஸ்.பி வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டியிருக்கிறார். 

போராட்டம்

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், 16-ம் தேதி காலை முதலாகவே அங்குள்ள பொது இடத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்ஸிஸ்ட் மாவட்டச் செயலாளரான கே.ஜி.பாஸ்கரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவரான கோபாலன், எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான அரிராம் உள்ளிட்டோரும் இஸ்லாமிய அமைப்பினரும் திரண்டனர். 

தென்கலம் அருகில் உள்ள கிராம மக்களும் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். இந்த நிலையில், பேச்சு வார்த்தைக்கு எந்த அதிகாரியும் வராததால் அங்கேயே சாமியானா அமைத்து இரவிலும் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.