ஆயிரக்கணக்கான அரிவாள்கள், லட்சக்கணக்கான வாழைப்பழங்கள்..! திண்டுக்கலில் விநோத வழிபாடு

Banana Festivel

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ளது சேவுகம்பட்டி கிராமம். சுமார் 500 குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தை மாதம் 3 ம் தேதி இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்கு வந்து விடுகிறார்கள். இந்தக் கிராமத்தில் சோலைமலை அழகர்கோவில் என்ற பழைமையான கோவில் உள்ளது. தை 3 ம் தேதி இந்தக் கோவில் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காடுகரை செழிக்கணும் ஆடு, மாடு சேரணும், தொழிலு விளங்கணும் அழகரே என விதவிதமான கோரிக்கைகளுடன் அழகர்கோவில் வரும் பக்தர்கள், வாழைப்பழத்தை வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். இங்கு அர்ச்சனை செய்த பிறகு, வாழைப்பழத்தை மேலே தூக்கி எறிந்து சூரை விடுகிறார்கள். ஒரு சீப்பு இரண்டு சீப்பை சூரை விடுவது இல்லை. கூடைக்கூடையாக, வண்டி வண்டியாக வாழைப்பழத்தை சூரை விடுகிறார்கள். ஒரு கூடை முதல், ஒரு லாரி நிறைய வாழைப்பழம் வரை நேர்த்திக்கடனுக்கு ஏற்ப வாழைப்பழத்தை சூரை விடுகிறார்கள். இந்த வாழைப்பழத்தை பிரசாதமாக நினைத்து, முந்தானை ஏந்தி பிடிக்கிறார்கள் பெண்கள். இந்தக் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் சூரை விடும் பழக்கம் பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் சூரை விடப்பட்டன. 

Banana festivel 

இதேபோல வத்தலகுண்டு அருகேயுள்ள மற்றொரு கிராமம் முத்தலாபுரம். இங்குள்ள காவல் தெய்வம் கோட்டை கருப்பணச்சாமி. ஆயிரம் அருவாள் கருப்பணச்சாமி எனவும் சொல்கிறார்கள். விபத்து இல்லாத பயணம் வேண்டி, கருப்பணச்சாமியை வேண்டிக்கொள்வது இந்தப் பகுதி மக்களின் வழக்கம். கருப்பணிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் காணிக்கை கொடுத்தாக வேண்டும். காணிக்கையாக எந்தப் பொருளும் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை.  அருவாள் மட்டுமே காணிக்கையாகச் செலுத்துவார்கள். இந்த அருவாளை செய்து தருவதற்கென்றே இதே ஊரில் ஐந்து குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் பக்தர்களின் தேவைக்கேற்ற அளவுகளில் அருவாள்களை அடித்துக்கொடுப்பார்கள். இரண்டு அடி முதல் பதினாறு அடி நீளமுள்ள அருவாள் வரை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். பல ஆண்டுகளாக காணிக்கை செலுத்திய அருவாள்கள் கோவிலில் குவிந்துக்கிடக்கின்றன. இவற்றை ஏலம் விடுவதோ, மறுபயன்பாட்டுக்கு எடுப்பதோ இல்லை. ஆண்டுதோறும் தை மாதம் 3 ம் தேதி இந்தக் கோவில் திருவிழா விமரிசையாக நடக்கும். அதன்படி இன்று நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருவாள் காணிக்கை செலுத்தினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!