வெளியிடப்பட்ட நேரம்: 02:43 (17/01/2018)

கடைசி தொடர்பு:02:43 (17/01/2018)

வைரமுத்துவுக்கு உப்பு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பா.ஜ.க!

வைரமுத்துவுக்கு உப்பு அனுப்பும் போராட்டத்தில் கோவை பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர்.

உப்பு அனுப்பும் போராட்டம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்துவை மிகக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

இதையடுத்து, வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழுக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இயக்கத்தினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி வைரமுத்துவுக்கு உப்பு அனுப்பும் போராட்டத்தில், கோவை பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர். கோவை, கலெக்டர் அலுவலகம் முன்பு கூடிய பா.ஜ.க-வினர் வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், உப்புடன் பேரணியாகச் சென்ற அவர்கள், வைரமுத்துவுக்கு உப்பு அனுப்பினர். இதுகுறித்து கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்தகுமார், "ஆண்டாள் தான் எழுதிய எந்தப் பாசுரங்களுக்கும் காசு வாங்கியதில்லை. வைரமுத்து காசு வாங்காமல், எந்தப் பாடலையும் எழுதியதில்லை. தமிழை வைத்து, சினிமாவில் பாடல் எழுதி வயிறு வளர்க்கும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை.ஆண்டாள் குறித்து தவறான தகவல் பரப்பிய வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.