''தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்காவுக்கு அடிமை..!'' அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சித் தகவல்

அன்புமணி

''தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களையொத்த வயதினர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது'' என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் குட்கா மற்றும் போதைப் பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குட்கா விற்பனை ஊழலால் இந்திய அரங்கில் தமிழகத்தின் பெயர் சீர்கெட்டுப் போயிருக்கும் நிலையில், அதன் விற்பனையை ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் தடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் ஆய்வு செய்ததில் சென்னை மாநகர எல்லையில் மட்டும் குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா போன்ற போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதை அறிய முடிந்தது. ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆதரவின்றி போதைப்பாக்குகளை விற்பனை செய்வது சாத்தியமல்ல. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக 01.04.2016 முதல் 15.06.2016 வரையிலான இரண்டரை மாதங்களில் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா நிறுவனம் ரூ.56 லட்சம் கையூட்டு கொடுத்ததாக அந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று உயர்நீதிமன்றம் வினா எழுப்பும் அளவுக்கு குட்கா ஊழல் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இதற்குப் பிறகும் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடையின்றி நடக்கிறது என்றால், அதை அனுமதிப்பதற்கான ஊழலும் தொடருவதாகத் தான் பொருள். குட்கா பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலக் கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களையொத்த வயதினர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

குட்காவும், புகையிலையும் சமூகத்தை இந்த அளவுக்கு சீரழிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், அதை தடுக்க வேண்டிய சுகாதார அமைச்சரும், காவல்துறை அதிகாரிகளும் குட்கா விற்பனைக்கு அப்பட்டமாக துணை போவது மன்னிக்க முடியாத குற்றமாகும். குட்கா ஊழல் கடந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் பெரும் சர்ச்சையான போது சென்னையில் குட்கா விற்பனையை தடுக்க அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக இப்போது அனைத்துக் கடைகளிலும் அச்சமின்றி குட்கா விற்பனை செய்யப்படுகிறது. 

குட்கா விற்பனைக்கு கடுமையான நெருக்கடி இருந்த போது, அதன் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும், இப்போது கெடுபிடி குறைந்து விட்டதால் போதைப்பாக்குகளின் விலையையும் குறைக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால் குட்கா வணிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். ஒருபுறம் மது சமூகத்தை சீரழிக்கும் நிலையில் மற்றொருபுறம் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களும் சமூகத்தை சிதைக்கத் தொடங்கியிருக்கின்றன.

 இதே நிலை நீடித்தால், வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த தமிழகம் நோய்களின் கூடாரமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க முழு மதுவிலக்கையும், குட்கா விற்பனை மீது உண்மையான தடையையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, குட்கா ஊழலின் ஆதி முதல் அந்தம் வரை அடையாளம் கண்டு, சமூகத்தை சீரழித்தவர்களை தண்டிக்க வசதியாக குட்கா ஊழல் குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!