கிராமங்களில் களையிழக்கும் ஜல்லிக்கட்டு!  - வேதனைதரும் பின்னணித் தகவல்கள்

Jallikkattu

கடந்த வருடம், உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுக்கான உரிமைப் போராட்டம். அந்த உரிமையை மீட்டெடுத்த பிறகு, படு உற்சாகமாக தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு விழா களைகட்டியது. புது ரத்தம் பாய்ச்சியதுபோல தமிழகமே ஆர்த்தெழுந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு நடக்காத ஊர்களிலும் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு ராபூசல் என்ற கிராமத்தில் நடந்தது. அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டம் என்ற பெருமையை புதுக்கோட்டை  தக்கவைத்துக்கொண்டது.கடந்த வருடம், 67 போட்டிகள் நடந்திருக்கிறது. இந்த வருடமும்  தமிழ்நாட்டிலேயே முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கடந்த 2-ம் தேதியன்று நடத்தி முடித்ததும் புதுக்கோட்டை மாவட்டம் தான். இப்படியான புதுக்கோட்டை, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக போட்டிகள் நடந்துகொண்டிருந்தாலும், அதிக அளவில் ஜல்லிக்கட்டை நடத்தும் மாவட்டம் என்ற பெருமையை இழந்துவிடும் நிலைமையில் இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம்.

'இந்த மாவட்டம்தான் என்றில்லை, தமிழ்நாடு முழுவதும் இப்போது அதுதான் நிலைமை' என்கிறார்கள், போட்டியைப் பல வருடங்களாக நடத்திவரும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள். 'ஏன் என்ன பிரச்னை?' என்று நாம் கேட்டதற்கு, அவர்கள் கூறிய விளக்கம் கவலை தரக்கூடியது.
'ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான செலவு அதிகமாகியுள்ளது.குறைந்தபட்சம்  3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை செலவாகிறது. முன்னாடி எல்லாம் அவ்வளவு செலவுக்கே வேலை இருக்காது. எப்போது அரசு வழிகாட்டுதல் நடைமுறைப்படிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதோ, அப்பவே செலவுகள் எகிறிடுச்சு. வாடிவாசல்அமைப்பு, மேடை, பாதுகாப்புத் தடுப்புகள், தேங்காய் நார், மாடு பிடி வீரர்களுக்கான சீருடை,  சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்களுக்கு மரியாதைசெலுத்த துண்டு, உணவு, மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் தரவேண்டிய பரிசுகள் என  அதிக பட்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. அவ்வளவு தொகை செலவுசெய்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமா? என்ற யோசனை இப்போது எல்லா ஊர்களிலும் பரவிவிட்டது. அரசின் வழிகாட்டு முறைகள் இல்லாதபோது, அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குள் போட்டியை நடத்திவிடமுடியும். தெருவில் நிற்கும் நான்கு மாட்டு வண்டிகளை இழுத்துப்போட்டால் வாடிவாசல் தயாராகிவிடும். இப்போது அப்படி இல்லை' என்கிறார்கள். 'மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் இங்கெல்லாம் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடந்திருக்கிறதே?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் விரக்தியாகவே பதில் சொன்னார்கள்.

"அந்த மூன்று ஊர்  ஜல்லிக்கட்டுக்கும் ஊடகங்கள் மிகப்பெரிய முக்கியத்துவம் தருகின்றன. முதலமைச்சரே கலந்துகொள்கிறார்.அமைச்சர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் அதிகபட்சமாக  5 லட்சம் செலவாகும் என்றால், அவர்களுக்கு 30 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு செலவுசெய்ய அவர்களால் முடியும். அந்த மூன்றும் நட்சத்திர ஜல்லிக்கட்டு. ஆனால், கிராமப்புறங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு அப்படி இல்லையே. தலைக்கட்டுவரி போட்டும் டொனேஷன் வாங்கியும்தானே ஜல்லிக்கட்டே நடத்துகிறோம். அரசு பணமா தருது. இந்த முரட்டுச் செலவுகள் எங்களை மிரட்டுவதால், ஜல்லிக்கட்டு நடத்தும் ஆர்வமே எங்களுக்குக் குறைந்து விட்டது' என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!