`சித்திரங்கள் சூழ் சித்தன்னவாசல்!' - புதுக்கோட்டை மாவட்டத்தின் பழங்காலப் பெருமை | 'Chitras Sittanavasal' - ancient pride of the district of Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (17/01/2018)

கடைசி தொடர்பு:14:35 (25/06/2018)

`சித்திரங்கள் சூழ் சித்தன்னவாசல்!' - புதுக்கோட்டை மாவட்டத்தின் பழங்காலப் பெருமை

புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே சட்டென்று சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவுக்குவருவது சித்தன்னவாசல்தான். அதுபற்றிய வரலாறு மற்றும் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொண்டால், போகாதவர்களை அங்கு போகத்தூண்டும். அப்படி ஒரு ஈர்ப்பை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது சித்தன்னவாசல்." அப்படி ஒரு ஈர்ப்பை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது சித்தன்னவாசல்.
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் வழியில் 16-வது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, சித்தன்னவாசல். 
'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்புப் பெயர் இதற்கு உண்டு. சித்தன்ன வாசலுக்கு நாம் பேருந்தை விட்டு இறங்கி 2 கி.மீ. தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். இந்த மலை, வடக்கு - தெற்காக அமைந்துள்ளது. 2030 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழைமையான ஊராகும். 

'சித்தானம் வாசஹ்' என்னும் வடமொழிச் சொற்களிலிருந்து இப்பெயர் வந்தது என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
இதற்கு, 'துறவிகள் இருப்பிடம்' என்பது அர்த்தம். சித்தன்னவாசல் ஓவியங்கள் 7-ம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திர வர்மனால் வரையப்பட்ட ஓவியங்கள் என்று சொல்லப்படுகிறது.
 
பல்லவர் காலத்துக்கு முந்தைய கோயில்கள், செங்கற்களாலும் மரத்தாலும், மண்ணாலும் உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன.
குகைக் கோயில்களையும் - குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், மகேந்திர வர்மன்தான். மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், சமணர் படுக்கை உள்ளது. மொத்தம் 7 படுக்கைகள் உள்ளன. தலை வைத்துக்கொள்ள தலையணைபோல மேடாகச் செதுக்கி வைத்துள்ளனர். இந்தப் படுக்கைகளில்தான் சமண முனிவர்கள் படுத்துறங்கினராம்.

பாறைப் படுக்கைகளில் பிரமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழிக் கல்வெட்டு உள்ளது. கி.பி. 8-9-ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இப்பகுதி, 'ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
கி.பி.10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்றாக உள்ளன. சித்தன்னவாசல் என்றாலே ஓவியங்கள்தானே சிறப்பு. அந்த ஓவியங்களைப் புகைப்படங்கள் எடுக்க கடந்த ஐந்து வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கேமரா,மொபைல் கேமரா உள்ளிட்டவைகளுக்கு ஓவியங்கள் இருக்கும் பகுதியில் அனுமதி இல்லை.


சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள் என்றே வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். 
இப்போது அங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தது என்று தெரியவருகிறது. நடு மண்டபத்தை அடுத்து இருப்பது கோயில். வலப்பக்கமும் இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணர் தலைவர் சிலையும் உள்ளன. 

உள் அறையின் மேல்விதானத்தின் நடுவில், கல்லில் செதுக்கப்பட்ட தாமரைச் சிற்பம் உள்ளது. சுவர் ஓவியங்கள் இடைக்காலத்தில் வெளித் தெரியாமல் மறைந்திருந்தன. 1919-ம் ஆண்டில் இதைக் கண்ட டி.ஏ.கோபிநாத ராயர் என்பவர், புதுச்சேரியில் வாழ்ந்த ஃப்ரெஞ்சுக்காரரான முயோ தூப்ராய் என்பவருக்குத் தெரிவித்தார். அவர், சித்தன்னவாசலுக்கு வந்து சுவர் ஓவியங்களின் பெருமையை உலகிற்குத் தெரிவித்தார்.

சித்தன்னவாசல், இப்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில்,சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். 
2 1/2 ஏக்கர் நிலத்தில் 10 அடி ஆழம் உள்ள செயற்கைக் குளம் ஒன்று உருவாக்கப்பட்டு, படகு சவாரிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன முறையில் இசை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு, கோடை விடுமுறையின்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக வருகின்றனர். 
நாம் ஒருதடவை  சென்று பார்க்கவேண்டிய அவசியமான இடம் சித்தன்னவாசல்.