வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (17/01/2018)

கடைசி தொடர்பு:13:28 (17/01/2018)

``மாற்றுத்திறனாளி என்று என்னை ஒருபொழுதும் நினைத்ததில்லை” சதுரங்க ராணி ஜெனித்தா ஆண்ட்டோ! #ConfidentWomen

ஜெனித்தா


“எப்பவும் மதிய உணவுக்குப் பிறகு ஆரம்பிக்கும் போட்டி, இரவு உணவு வரை நீடிக்கும். அவ்வளவு நேரமும் வித்தியாசமா வியூகத்தை அமைக்க யோசிச்சா மட்டும்தான் கேம் நம்ம கன்ட்ரோலில் இருக்கும். எதிர்தரப்பில் விளையாடறவங்க மனநிலையிலிருந்தும் யோசிக்கணும். அவங்களை திணறவைக்கிற மாதிரி நம்ம மூவ்ஸ் இருக்கணும்'' - ஆழமான வார்த்தைகளுடன் பேசுகிறார், ஜெனித்தா ஆண்ட்டோ. மாற்றுத்திறனாளிகள் தனிநபர் செஸ் போட்டியில் ஐந்து முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ள சதுரங்க ராணி. 

திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனித்தா, தன்னை மாற்றுத்திறனாளியாக ஒருபோதும் நினைத்துக்கொண்டதில்லை. "என் அப்பா கணிகை இருதயராஜ். ஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா ஜெயராணி. ஓர் அண்ணா, ஓர் அக்கா. அத்தனை பேருக்கும் என்மீது அவ்வளவு அன்பு, அக்கறை. நான் எட்டாம் வகுப்பு வரை ஸ்கூலுக்குப் போயிட்டிருந்தேன். அப்புறம், பி.காம் வரை வீட்டிலிருந்தே படிச்சேன். 1995-ம் வருஷம் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில் முதல்முறையா கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கினேன். இப்போதைய வெற்றிகளுக்கு அடித்தளமா இருந்தது அந்தப் போட்டிதான்” என்கிறார் ஜெனித்தா. 

ஜெனித்தா

பல பயிற்சியாளர்களிடம் சதுரங்க நுணுக்கங்களைப் பெற்றிருக்கும் ஜெனித்தாவின் முதல் பயிற்சியாளர், அவர் அப்பாதான் என்கிறார். “அப்பாவுக்கு விளையாட்டு மீதான ஆர்வம் அதிகம். செஸ் விளையாட்டின் தனித்துவத்தை அழகாச் சொல்லிக்கொடுத்தார். தினமும் எட்டு மணி நேரம் பயிற்சி எடுப்பேன். செஸ் தொடர்பான புத்தகங்கள் படிப்பேன். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களில் அப்பா என்னோடு இருந்து ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லி உற்சாகப்படுத்திட்டே இருப்பார். வெளிநாடுகளில் என்னால் சுமுகமாக பயணிக்க முடியுது. காரணம், அங்கே யாருமே மாற்றுத்திறனாளிகளை ஆச்சரியமாகவோ, பரிதாபமாகவே பார்க்கறதில்லே. இயல்பாகப் பழகறாங்க. அதனால், என்னைத் தனித்து உணர்றதே இல்லே. 2017-ம் ஆண்டுக்கான 17-வது மாற்றுத்திறனாளிகள் தனிநபர் செஸ் போட்டி ஸ்லோவாகியா நாட்டில் நடந்துச்சு. அதில் கலந்துக்கிட்டது ஆனந்தமான தருணங்கள்.

எட்டாவது ரவுண்டில் நான் எதிர்த்து ஆடினது ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை. ஏற்கனவே அவருடன் நிறையப் போட்டிகளில் விளையாடியிருக்கேன். டிரா அல்லது தோல்விகளை மட்டுமே சந்திச்சிருக்கேன். இந்த முறை அவரை ஜெயிச்சதும், அவரும் மற்ற போட்டியாளர்களும் என்னைக் கட்டித்தழுவி பாராட்டினப்போ கண்ணீர் வந்துருச்சு. 2013 முதல் 2017 வரை தொடர்ந்து சாம்பியன் ஆனது மறக்கமுடியாத அனுபவம்” என நெகிழ்கிறார் ஜெனித்தா.

“பாபி பிஷர் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ரெண்டு பேரும்தான் என் ரோல்மாடல்கள். போன வருஷமே விஸ்வநாதன் சார் வீட்டுக்குக் கூப்பிட்டார். சந்திச்சிப் பேசினேன். பாராட்டும் பல ஆட்ட நுணுக்கங்களையும் சொன்னார். நவம்பர் 9-ம் தேதி அவர் திருச்சிக்கு வந்திருந்தப்பவும் சந்திச்சு பேசினேன். ‘நான் மட்டும் பைவ் டைம் வேர்ல்டு சாம்பியன் கிடையாது. இதோ ஜெனிதாவும் இருக்காங்க'னு சொன்னபோது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. புதுசா செஸ் விளையாட வர்றவங்களில் சிலர், முதல் நாள் பரீட்சைக்கு படிச்சிட்டு போய் எழுதற மாதிரி நினைச்சுக்கிறாங்க. சதுரங்கத்தில் ஜெயிக்க நிறையப் பொறுமை தேவை. ஒவ்வொரு நொடியும் கத்துக்கிட்டே இருக்கணும்” என்கிறார் ஜெனித்தா. 

திருச்சி மாவட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவரா தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் ஜெனித்தா, “அந்தத் திட்டத்துக்கு என்னால் முடிஞ்ச பங்களிப்பைச் செய்து, இந்தச் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருப்பேன். ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகறது என் லட்சியம். அதைநோக்கியும் பயணிச்சுட்டு இருக்கேன். என் பொழுதுபோக்குனு பார்த்தால், எப்போதாவது சினிமா பார்ப்பேன். குறிப்பாக, பயோபிக் ஜானர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதிலிருந்து நிறைய தன்னம்பிக்கையைக் கத்துக்கலாம்” எனப் பொழுதுபோக்கிலும் சாதனைக்கான தேடலைப் பார்க்கிறார் ஜெனித்தா. 

ஜெனித்தாவைப் போன்றவர்களின் வெற்றி சமூகத்தின் வெற்றி. வாழ்த்துகள் தோழி!


டிரெண்டிங் @ விகடன்