வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (17/01/2018)

கடைசி தொடர்பு:18:10 (17/01/2018)

போலீஸாரை உசுப்பேத்தி பொறியில் விழுந்த நாதுராம்!

ன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சாவுக்கு முக்கிய காரணமாக இருந்த நாதுராமை தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

பிடிபட்டட நாதுராம்

சென்னை, கொளத்தூரில் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான நாதுராமைப் பிடிக்க, ராஜஸ்தான் மற்றும் தமிழக போலீஸார் இணைந்து எடுத்த முயற்சி பலிக்கவில்லை. 10 நாள்களுக்கு முன், `நாதுராம் ஜாட்' என்ற பெயரில் `முடிந்தால் என்னை பிடித்துப் பார்க்கவும்' என்று, நாதுராம் கையில் துப்பாக்கியுடன் ஃபேஸ்புக்கில் கொக்கரிக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவுசெய்தார். ஆணவத்துடன் வெளியிட்ட ஃபேஸ்புக் புகைப்படம், இரு மாநில போலீஸாரையும் உசுப்பேத்தியது. நாதுராமின் ஃபேஸ்புக் கணக்கு வழியாகப்  பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை ராஜஸ்தான் சைபர் போலீஸ் கண்டுபிடித்தது. 

நாதுராம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் முதல் மஹாராஷ்ட்ரா வரை சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன், ராஜ்காட் பகுதியில் நாதுராமின் செல்போன் டவர்  காட்டியது. இதைத் தொடர்ந்து , பாலி மாவட்ட எஸ்.பி., தீபக் பர்கவ் தலைமையிலான குழு நாதுராமை பிடிக்கச் சென்றது. அப்போது, ராஜ்காட்- மாந்தோ சாலையில், தன் கூட்டாளி சுரேஷ் பேகுவாலுடன் நாதுராம் காரில் சென்றுகொண்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.. 

சினிமா பாணியில் நாதுராமின் காரை போலீஸார் சேஸ் செய்தனர். போலீஸாரைக் கண்டதும் நாதுராமின் கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீஸாரை நோக்கி நாதுராமும் கூட்டாளியும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சமயோசிதமாக செயல்பட்ட போலீஸார், நாதுராம் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால்  சுட்டு, டயரை பஞ்சர் செய்தனர். கார் பஞ்சரானதும் அதிலிருந்து இறங்கி இருவரும் ஓடத் தொடங்கினர். அப்போது, துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட்டு,  துப்பாக்கி முனையில் கொள்ளையர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

தற்போது ராஜஸ்தான் போலீஸாரின் காவலில் உள்ள அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். தமிழக போலீஸார் விரைவில் நாதுராமை தமிழகம் கொண்டுவந்து விசாரிக்க முடிவுசெய்துள்ளனர். நாதுராமிடமிருந்து இரு கைத்துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவை, ஜெய்ப்பூரில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனைசெய்ய அனுப்பப்பட்டுள்ளன. 

கொளத்தூர் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தினேஷ் சௌத்ரி, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாதுராமின் கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, தேஜ்ராம் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாதுராம் பிடிபட்டிருப்பதால், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் மரணத்தில் நிலவும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, ஃபேஸ்புக்கில் படத்தைப் பதிவிட்டு, நாதுராம் தானே வந்து போலீஸிடம் பிடிபட்டுள்ளதுதான் ஸ்பெஷல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க