`இது திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்!' - கொதிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மீது காவல்துறை நடத்தியத் தாக்குதலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

G.Ramakrishnan


இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி மீது திருப்புவனம் காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செவ்வாயன்று  மாலை திருப்புவனம் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோர் திருப்புவனம் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த அப்பாவி பெண்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் காய்கறிக் கூடைகளை எட்டி உதைத்து சாலையில் வீசியுள்ளனர். பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தன் மனைவியுடன் காய்கறி வாங்க வந்த மு.கந்தசாமி இதைப் பார்த்து காவல்துறையினரிடம், “ஏழை, எளிய மக்களிடம் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்” என்று நியாயம் கேட்டுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள், “இதைக் கேட்க நீ யார்” என்று அவரை தாக்க முயன்றுள்ளனர். தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று கூறியும் அவரை மிக இழிவாகத் திட்டி, கன்னத்தில் அறைந்ததோடு, கைகளைப் பின்புறமாகக் கட்டி ஆட்டோவில் தூக்கிப்போட்டு காவல்நிலையத்துக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் கழிவறை அருகே அவரை நிறுத்தி ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, லத்தி கம்புகளால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தோழர் மு.கந்தசாமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலனுக்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தப் பின்னணியில், திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துள்ள காவல்துறை துணை ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலர்கள் சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்வதோடு, கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

திருப்புவனம் காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்புமாறு கட்சி அணிகளையும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டனக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!